திருகோணமலையில் வீடொன்று தீக்கிரை - அனைத்து பொருட்களும் சேதம்
திருகோணமலை - கன்னியா, கிளிக்குஞ்சு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீடொன்று தீ அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ள நிலையில் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
வீடு தீப்பிடித்து எரிவதாக அயலவர்கள் தெரியப்படுத்தியதை அடுத்து வீட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்த போது வீடு முழுமையாக தீக்கிரையான நிலையில் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் அடையாள அட்டை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என வீட்டில் காணப்பட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த வீட்டை மஹதிவுல்வெவ - தெவனிபியவர விஜயராஜ விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி சென்று பார்வையிட்டுள்ளதுடன் குடும்பத்திற்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளார்.
அத்துடன் வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்று தருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



