முல்லைத்தீவில் காட்டு யானையின் தாக்குதலில் வீடு முற்றாக சேதம்
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிய சாளம்பன் கிராமத்தில் வாழ்ந்து வரும் வயோதிப குடும்பம் ஒன்றின் தற்காலிக வீட்டினை யானையொன்று உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(9) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒட்டுசுட்டான் பெரிய சாளம்பன் பகுதியில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் முழுமை பெறாத நிலையில் தற்காலிக வீட்டில் வசித்து வந்த வயோதிப குடும்பம் நேற்று இரவு ஒட்டுசுட்டான் சிவன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்கள்.
வீடு முற்றாக சேதம்
இந்த நிலையில் இரவு வேளை கொம்பன் யானை ஒன்று காணிக்குள் வந்து தற்காலிக வீட்டினை உடைத்து தள்ளியதுடன் வீட்டில் இருந்த நெல் பைகளை சேதப்படுத்தி உணவாக உட்கொண்டுள்ளது.
இதனால் பெரும் இடர்களை தாம் சந்தித்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த யானையினை கிராம இளைஞர்கள் கலைக்க முற்பட்ட போது அது இளைஞர்களை துரத்த முற்பட்டுள்ளது. பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே இளைஞர்கள் யானையினை கலைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் வந்து பார்வையிட்டு விபரங்களை திரட்டியுள்ளார்கள் . வீட்டில் இருந்த உணவு பொருட்கள் யானையின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதுடன் அழிவடைந்தும் உள்ளன.
காட்டுயானையின் தொல்லை
இதனால் அடுத்த வேளை என்ன செய்வது என்று தெரியாத நிர்கதிக்கு தாம் உள்ளாகியுள்ளதாக வயோதிபர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அரசாங்கம் சஜித் பிரேமதாச வீடமைப்பு அதிகார சபையின் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வந்த வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டு காணப்படுகின்றது.
இதனால் மீள்குடியேற்றத்தில் இருந்து சுமார் 15 ஆண்டுகள் தற்காலிக கொட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பெரியசாளம்பன் கிராமத்தில் காட்டுயானையின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் யானை வேலி அமைத்து கொடுப்பதாக தெரிவித்தும் இதுவரை யானை வேலி அமைத்து கொடுக்காத நிலையில் நாளாந்தாம் யானையினால் அழிவுகளை சந்தித்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
