சுகாதார நடைமுறையினை பின்பற்றாத நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! (Photos)
மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறையினை பின்பற்றாத நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
இச் சோதனை நடவடிக்கை நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது.
இரவு நேரங்களில் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு கையாளப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களிற்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மிதுன் ராஜ், அமிர்தாப், கிஷான் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பிரபல உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலை கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் நீதிமன்றம் ஒரு உணவகத்திற்கு 60ஆயிரம் ரூபாவும் ஏனைய மூன்று உணவகங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் தண்டப்பணம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.











