பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது
பெண்களை இரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில், 19 வயதுக்கும் உட்பட்ட தேசிய கிரிக்கட் அணியின் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்களே இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அந்த விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள், தாங்கள் குளிப்பதை யாரோ அலைபேசி மூலம் ரகசியமாக வீடியோ எடுப்பதாக அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இவர்கள் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளனவா என்பது குறித்து நாரஹேன்பிட்ட பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு வீரர்களும் அளுத்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, தலா 5 லட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.