பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டின் பல மாவட்டங்களில் இன்று மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானிக்க வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அந்த திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இன்றைய தினத்தில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதான நிலையை எட்டியுள்ளதால், அதுகுறித்து பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எச்சரிக்கை
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமின்றி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் வறட்சியான வானிலை தணிவதற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெய்யவுள்ள இடைப் பருவமழைக் காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்ற போதிலும், அதனால் நிலவும் கடுமையான வறட்சி நிலைமை தணியும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.