காணி உறுதிப்பத்திரம் வழங்குவதாக கூறி ஏமாற்றுகின்றதா அநுர அரசு..! ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு
அண்மையில் பண்டாரவளை - கபரகலை தோட்டத்தில் வழங்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கு இதுவரையில் காணி உரிமைப்பத்திரம் கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
கபரகலையில் வழங்கப்பட்ட 50 வீடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 50 வீடுகளில் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. மாறாக, அந்த வீடுகளுக்கான காணி உரிமைப்பத்திரம் இதுவரையில் கொடுக்கப்படவில்லை.

அன்று, 163 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த 163 காணி உறுதிப்பத்திரங்களும் 2015 முதல் 2025 வரையான காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்ட வீடுகளுக்கான காணி உரிமை ஆவணங்களாகும்.
அப்படியானால், அன்று கபரகலையில் திறந்து வைக்கப்பட்ட 50 புதிய வீடுகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் எங்கே? மேலும், அந்த 50 வீடுகளின் பயனாளிகளிடம் வழங்கப்பட்ட ஆவணம் காணி உறுதிப்பத்திரம் அல்ல, மாறாக ஒப்பந்தம் என்பது போன்றே தெரிகின்றது. காணி உறுதிப்பத்திரம் என்பது வேறு, ஒப்பந்தம் என்பது வேறு என்பதை இந்த இடத்தில் பதிவுச் செய்துக் கொள்ள விரும்புகின்றேன்.
53 வருட ஒப்பந்தம்
எனவே, கபரகலை தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளுக்கான காணி உரிமை எவ்வாறு பயனாளிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? அவர்கள் பெற்றுள்ள ஆவணம் உண்மையில் காணி உறுதிப்பத்திரமா அல்லது ஒப்பந்தமா? என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிராக இருப்பது நாங்களோ நீங்களோ தொழிற்சங்கங்களோ அல்ல தோட்ட நிர்வாகம் தான். இன்றும் காணிகளை பெற்றுக்கொடுக்க தடையாக உள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி, தோட்ட முதலாளிமார்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் 2044ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் தற்போது நேரகாலத்தோடு இந்த ஒப்பந்தத்தினை மீண்டும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
பெருந்தோட்டங்களை பெற்றுக்கொண்டு 20 நிறுவனங்களில், 16 நிறுவனங்கள் தாங்கள் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாகவும் காட்டியுள்ள நிலையில், அவர்களுடனான ஒப்பந்தம் நீடிப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.