இலங்கையில் நெருக்கடி நிலை - முடங்கும் அபாயத்தில் மருத்துவமனைகள்
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக நாளை முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகளை குறைக்க வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
இருதய சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மணிக்கணக்கில் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுக்க நேரிட்டதாக மருத்துவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு இருதய சத்திரசிகிச்சை பிரிவுகள் மாத்திரம் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட சுகாதார ஊழியர்கள் 6 மணி முதல் 10 மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் பணிக்கு அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.