வவுனியாவில் கோர விபத்து - இளம் தந்தையும் குழந்தையும் பலி : தாய் படுகாயம்
வவுனியா, புளியங்குளம் புதூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் தந்தையும், ஒரு வயது நிரம்பாத குழந்தையும் பலியாகியுள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது இன்று (09.10.2026) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம், சமளங்குளம் வயலில் நெல் விதைப்பதற்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை, தாய், ஒரு வயது நிரம்பாத குழந்தை உள்ளிட்டவர்கள் புளியங்குளம், புதூர், 207Mவது மைல் கல் அருகில் வாகனம் ஒன்றை முந்த முயற்சித்த போது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் மரணமடைந்த குழந்தை
விபத்தில் காயமுற்றவர்களை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றில் ஏற்றி புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை மற்றும் குழந்தையின் உடலம் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த தாயார் நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பாடசாலை மாணவர்களில் இருவர் விபத்தை பார்வையிட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் மரணமடைந்த குழந்தை இம்மாதம் 23ஆம் திகதி தனது முதலாவது அகவையைப் பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri