ஆளுங்கட்சியின் 25 இற்கும் மேற்பட்ட பிரமுகர்களின் வீடுகள் தாக்கி எரிப்பு: முழுவிபரம் வெளியானது
ஆளுங்கட்சியின் 25 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மக்களால் நேற்றிரவு அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.
‘மைனா கோ கம’, ‘கோட்டா கோ கம’ அறவழிப் போராட்டக்காரர்கள் மீதும், அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்களின் போராட்டங்கள் வெடித்தன.
மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடாக வீரகெட்டிய - மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது. ராஜபக்சக்களின் பெற்றோரின் கல்லறையும் அடித்து நொறுக்கப்பட்டது.
ஜோன்சன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சனத் நிஷாந்த, திஸ்ஸ குட்டியாராச்சி, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரண, சாந்த பண்டார, அருந்திக்க பெர்னாண்டோ, கனக ஹேரத், மஹிபால ஹேரத், காமினி லொக்குகே, நிமல் லான்சா, பிரசன்ன ரணவீர, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன, குருநாகல் மேயர், மொரட்டுவ மேயர் 25 இற்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. அவர்களுக்குச் சொந்தமான சில விடுதிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
கொழும்பு - காலிமுகத்திடலுக்கு அரச வன்முறையாளர்களை அழைத்து வந்த பேருந்துகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொலிஸார் ஆகியோரின் வாகனங்களும் மக்களால் சேதமாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.
அநுராதபுரத்தில் உள்ள ராஜபக்சக்களின் மந்திரவாதியான 'ஞான அக்கா'
என்றழைக்கப்படும் ஞானவதியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான விடுதியும்
தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.