உலுக்கும் உக்ரைன் போர் வரலாறு
நித்தம் ஒரு யுத்தம் கண்ட வரலாறு உக்ரைனுக்கு உண்டு. ஹிட்லருக்கே சவால் விடுத்தது. இரண்டு உலகப் போர், உள்நாட்டு சண்டை, அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு என பல அபாயங்களில் இருந்து தப்பியது. 'போர் பூமி' என்றே அழைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை துணிச்சலாக போரிடுகிறது.
கிழக்கு ஐரோப்பாவில் உக்ரைன் அமைந்துள்ளது. இங்கு 10, 11ம் நுாற்றாண்டில் வலிமையான கீவியன் ரஸ் பேரரசு ஆட்சி செய்தது. உக்ரைன், பெலாரஸ், போலந்து, தற்போதைய ரஷ்யாவின் பல பகுதிகளை கொண்ட பெரிய பிரதேசமாக இருந்தது.
* 13ம் நுாற்றாண்டில் மங்கோலிய படையெடுப்பு கீவியன் பேரரசை சாய்த்தது. பின் போலந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, இம்பீரியல் ரஷ்ய மன்னர்கள் சேர்ந்து உக்ரைனை பங்கு பிரித்துக் கொண்டனர். இதில் பெரும்பகுதி போலந்து வசமாக, உக்ரைன் மக்கள் எதிர்த்தனர். 'கொசாக் கிளர்ச்சி' வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* அடுத்து முதல் உலகப் போரிலும் (1914-1918) உக்ரைன் தலை உருண்டது. இம்பீரியல் ரஷ்யாவில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி, மன்னராட்சிக்கு வேட்டு வைத்தது. உக்ரைன் தலைவர்கள் சிலர் சேர்ந்து தங்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினர்.
1918ல் 'உக்ரைன் மக்கள் குடியரசு' என தனி நாடு உருவானது. இதற்கு எதிராக உக்ரைனில் எஞ்சி இருந்த ரஷ்ய மன்னர் ஆதரவாளர்கள், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் ஓடிய இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் பலியாகினர். 1922ல் கிழக்கு உக்ரைன் முழுவதும் ரஷ்யாவை உள்ளடக்கி உருவான சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் வந்தது. மேற்கு உக்ரைனை போலந்து ஆக்கிரமித்தது.
* சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் மக்கள் சுதந்திரமாக இருந்தனர். அவர்களது மொழியை பேசினர். போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் உக்ரைன் மொழியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உக்ரைன் மக்கள் போராடினர்.
* 1939ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகள் போலந்தை தாக்கின. மறுபக்கம் போலந்து மீது சோவியத் யூனியனும் போர் தொடுத்தது. இரண்டு நாடுகளும் போலந்தை பங்கு பிரித்தன. போலந்திடம் இருந்த உக்ரைன் பகுதிகள் சோவியத் வசம் வந்தன. இதையடுத்து உக்ரைன் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் ஒன்றாகின.
* இரண்டாம் உலகப் போரிலும்(1939-1945) உக்ரைன் பாதிக்கப்பட்டது. ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தன. இதில் உக்ரைனின் கீவ் நகரை ஜெர்மனி படைகள் சுற்றி வளைக்க, சோவியத் படைகள் எதிர்த்து போரிட்டன. இரண்டு ஆண்டுகள் போர் நடந்தும் கீவ் நகரை ஹிட்லரின் நாஜி படைகளால் கைப்பற்ற முடியவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
* இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்க, உக்ரைனில் நிம்மதி ஏற்பட்டது. இந்தப் போரில் உக்ரைனில் 60 லட்சம் பேர் பலியாகினர். அடுத்து பஞ்சமும் ஏற்பட, பட்டினியில் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பஞ்சம் ஏற்பட்ட தருணத்தில் பெரும்பாலான உக்ரைன் மக்கள் சைபீரியாவுக்கு குடிபெயர்ந்தனர். அந்த இடங்களில் ரஷ்யர்கள் குடியமர்த்தப்பட்டனர். இதுதான் உக்ரைன் மண்ணில் ரஷ்ய மக்களின் ஆதிக்கத்திற்கு வித்திட்டது.
* 1991ல் சோவியத் யூனியன் உடைந்தது. உக்ரைன் தனி நாடாக உருவானது. சோவியத் யூனியனிலிருந்து 7.8 லட்சம் படை வீரர்கள் கிடைத்தனர். அணு ஆயுதங்களை விரும்பாத உக்ரைன், அவற்றை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. இது தவறான முடிவாக அமைந்தது. ஒருவேளை அணு ஆயுதங்களை ஒப்படைக்காமல் இருந்திருந்ததால், இன்று உக்ரைனை தாக்க ரஷ்யா அஞ்சியிருக்கும்.
* 2014ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கிரீமியா பகுதியை இணைத்துக்கொண்டது. 'நேட்டோ' அமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம் தெரிவிக்க, ரஷ்யாவின் கோபம் அதிகரித்தது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற துடிக்கிறது. மீண்டும் ஒரு முறை போர் முனையில் சிக்கி தவிக்கிறது உக்ரைன்.
போர்க்களம் இறங்குகிறார் 'மிஸ் உக்ரைன்' அழகி
“ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் இறங்குவேன்,” என கூறியுள்ள, 'மிஸ் உக்ரைன்' அனஸ்தசியா லென்னா, சமூக வலைதளத்தில் துப்பாக்கி ஏந்திய தன் படத்தை வெளியிட்டுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2015ல் மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அனஸ்தசியா லென்னா, இயந்திரத் துப்பாக்கி ஏந்திய தன் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 'ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களம் இறங்குவேன்' என்று கூறியுள்ள லென்னா, உக்ரைனுக்கு ஆதரவு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தல்
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவம் தலைநகர் கீவில் உள்ள மக்களுக்காக நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தலைநகரை விட்டு வெளியேற பாதுகாப்பான வழித்தடத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய ராணுவம் வாசில்கிவ் நகரை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு கூறியது.
தடையை மீறிய ரஷ்ய விமானம்
வட அமெரிக்க நாடான கனடாவின் வான்வழிக்குள் பறக்க ரஷ்ய விமானங்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. எனினும் தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ரஷ்யாவின் 'ஏரோபிலோட்' நிறுவனத்தின் விமானம் ஒன்று தடையை மீறி கனடா வான்வழிக்குள் பறந்துள்ளது.
இதை கனடா போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் ஒமர் அல்காப்ரா நேற்று உறுதிபடுத்தினார்.
ஆயுதம் அனுப்பும் அமெரிக்கா
போரை சந்தித்து வரும் உக்ரைனுக்கு உலக நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு 'ஸ்டிங்கர்ஸ்' எனப்படும் விமானங்களை தகர்க்கும் சிறிய அளவிலான பீரங்கிகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
352 உக்ரைன் மக்கள் உயிரிழப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் உயிரிழந்தோர் குறித்த விபரங்களை உக்ரைன் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதுவரை உக்ரைன் மக்கள் 352 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 116 குழந்தைகள் உட்பட 1684 பேர் காயமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கதிரியக்க தளத்தில் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்தும் தளத்தில் ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இருந்தும் அங்கிருந்த கதிரியக்க பொருட்கள் வெளியேறியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இதை அணுசக்தி தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. அந்த பகுதியை உக்ரைன் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ரஷ்ய நாணய மதிப்பு சரிவு
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. குறிப்பாக 'ஸ்விப்ட்' பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் நாணய மதிப்பு 26 சதவீதம் சரிவடைந்துள்ளது. வீழ்ச்சி அடையும் நாணய மதிப்பை உயர்த்தும் முயற்சியாக வட்டி விகிதத்தை 9.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ரஷ்ய மத்திய வங்கி நேற்று அறிவித்தது.'
ரஷ்யாவில் வலுக்கும் போராட்டம்
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டு மக்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தலைநகர் மாஸ்கோவில் சாலைகளில் இறங்கி அதிபர் புடினுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போலீசின் கைது நடவடிக்கைகளை பொருட்படுத்தாமல் புடின் அரசுக்கு எதிராக பேரணிகள் நடப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரினால் நேற்று ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன. டோக்கியோ ஹாங்காங் ஷாங்காய் ஆகிய இடங்களில் உள்ள பங்குச் சந்தைகள் சரிவடைந்தன. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பங்குச் சந்தை மட்டும் ஏற்றம் கண்டது.
ரஷ்யா மறுப்பு
உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது.
போலந்து உதவிக்கரம்
இந்தியாவுக்கான போலந்து நாட்டின் தூதர் ஆடம் புரகோவ்ஸ்கி டில்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே. சிங்கை நேற்று சந்தித்து பேசினார். போலந்தில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை வி.கே. சிங் கவனிக்க உள்ளார். இந்நிலையில் ஆடம் புரகோவ்ஸ்கி கூறுகையில் ''உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் இந்தியர்கள் உட்பட அனைத்து நாட்டு மக்களுக்கும் போலந்து தேவையான உதவிகளை செய்து வருகிறது. உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படுகிறது'' என்றார்.
36 நாடுகளுக்கு ரஷ்யா தடை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் கனடா போன்றவை தங்களுடைய வான் எல்லையை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா ஐரோப்பிய நாடுகள் உட்பட 36 நாடுகள் தன் வான் எல்லையைப் பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது.
வெளியேற உத்தரவு
ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் பெலாராசில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது.
நன்றி - தினமலர்