திலீபன் நினைவுநாளில் மறக்க முடியாத நெகிழ்ச்சியான வரலாற்றுப் பதிவுகள்
மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும் தண்ணீர், வெந்நீர்கூட அருந்தாது திலீபன் தன்னுயிர் ஈந்த அந்த மண்ணில், இன்று தமிழ் இளைஞர்கள் குடிவெறிக்கு உள்ளாகி போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள் என்ற செய்தியானது பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
திலீபனுக்கான கவிதை
திலீபனை பற்றிய நினைவுகள் இத்தகைய இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் என்று நம்புவோமாக. 'அவனை சாகவிட விரும்பும் ஒவ்வொருவரும் அறிக... அவனது பசி வலியது.
அவனது தாகமும் வலியது.
ஆனால் அவற்றிலும் வலியது அவனது சனங்களின் கோபம்...' என்று திலீபன் சாகும்வரையான உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்த போது அவரது நண்பன் திரு. ம.நிலாந்தனால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை அடிகளே இவை.
திலீபனை உண்ணாவிரதம் இருக்க அமர்த்தியவர்களில் ஒருவரான கவிஞர் காசிஆனந்தன் அந்த உண்ணாவிரத மேடையில் பாடிய கவிதை அடி பின்வருமாறு அமைந்தது...
'திலீபன் அழைப்பது சாவையா? - இந்த
சின்னவயதில் இது தேவையா?'
திலீபன் எனது அரசியல் மாணவன். பிள்ளையை பற்றி தாய்-தந்தையர் புரிந்திருப்பதைவிடவும் அந்த பிள்ளையை பற்றி ஓர் ஆசிரியன் புரிந்திருக்கக்கூடியது அதிகம்.
ஆதலால் திலீபனை பற்றி நான் எழுதக்கூடிய குறிப்பு ஒருபுறம் இரத்தமும், தசையானதாகவும் மறுபுறம் அறிவியல் பரிமாணம் கொண்டதாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
யார் இந்த திலீபன்?
திலீபனது சொந்த பெயர் பார்த்தீபன். எனக்கு பல புனைபெயர்கள் உண்டு. அவற்றில் ஒன்றான 'திலீபன்' என்ற பெயரையே தனக்கான புனைபெயராக சூடிக் கொண்டான்.
திலீபன் என்ற புனைபெயரை நான் உணர்வுபூர்வமாக எனக்கு தேர்ந்தெடுக்கவில்லை. என்மீது அன்புள்ள ஒருவராக பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் விளங்கினார்.
எனது வெளியீடுகளையோ கட்டுரைகளையோ புனைபெயர்களில் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இருந்தது.
இந்த வகையில் காலத்திற்குக் காலம் நான் பல புனைபெயர்களில் எழுதுவது வழக்கம். அந்தவகையில் எனக்கு ஒரு புனைபெயர் தேவைப்பட்ட தருணத்தில் சுப்பிரமணிய ஐயாவிடம் எனக்கு ஒரு புனைபெயர் சொல்லுமாறு கேட்டேன். அவர் முன்பின் யோசிக்காமல் இயல்பாகவே திலீபன் என்ற பெயரை வைக்குமாறு கூறினார்.
'திலீபன்' என்ற வடமொழிப் பெயரின் பொருள் 'இதயத்தை வென்றவன்' என்ற விளக்கத்தை அவர் என்னிடம் கூறியதுடன் காண்டேகர் எழுதிய 'கிரகஞ்சவதம்' என்ற நாவலில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் திலீபன் என்றும் அது தனக்கு மிகவும் பிடித்த பெயர் மட்டுமல்ல, நல்ல பாத்திரமும் என்று என்னிடம் கூறி அப்பெயரை வைக்குமாறு சொன்னார்.
அதன்படி திலீபன் என்ற பெயரில் சிறிது காலம் எழுதினேன். எனது இப்பேரின் வரலாற்றை அறிந்துகொண்ட திலீபன் தனக்கும் இப்பெயரை சூட விரும்பி உணர்வுபூர்வமாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
உண்மையிலேயே தான் சூடிக்கொண்ட பெயருக்கேற்ப தன் வாழ்விலும் வரலாற்றிலும் மக்களின் இதயங்களை வெற்றவனானான்.
அந்த பெயரை முதலில் நான் எனக்கு புனைபெயராக்கிய போது அது என் உணர்வுபூர்வ தேர்வாக அமையவில்லை. மாறாக எனது விருப்பத்திற்குரிய ஒரு கல்விமான் எனக்கிட்ட பெயர் என்பதால் அதனை ஏற்றுக்கொண்டேன். ஆனால் திலீபன் அதனை கொள்கை சார்ந்து ஓர் உணர்வுபூர்வமான தேர்வாக அந்த பெயரை தனக்கு சூடிக்கொண்டான்.
இயக்கத்தில் இணைந்த திலீபன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது அரசியற் பொறுப்பாளரும் எனது மாணவனுமான சுகந்தனால் ' திலீபன் ' இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
சுகந்தன் யாழ்குடா நாட்டிற்கான அரசியற் பொறுப்பாளாராக முதன்முறையாக நியமிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் தமிழீழப் பகுதி முழுவதுக்குமான அரசியற் பொறுப்பாளராகவே இருந்தார்.
இதிலிருந்து முழு தமிழீழத்திற்கும், தமிழீழ மாவட்டங்களுக்கும் பொறுப்பான தனித்தனி அரசியல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுதல் உருவானது.
சுகந்தன் திறமையும் நேர்மையும் கண்ணியமும் சமூகப்பற்றும் அறிவாற்றலும் கொண்ட ஓர் இளைஞனாக காட்சியளித்தார். இவனிடம் திண்ணிய மனமும், தீர்க்கமாக தீர்மானம் எடுக்கும் இயல்பும் இருந்தன.
அதேவேளை இவனிடம் கவனக்குறைவும், எதனையும் பெரிதென பொருட்படுத்தாத போக்கும் இருந்தன. எல்லாவற்றிற்கும் அப்பால் அசாத்தியமான துணிவும், திறமையும், அப்பழுக்கற்ற ஒழுக்கமும் கொண்டவன்.
பல்கலைக்கழகத்தில் சகமாணவர்கள் மத்தியில் அவருக்கென தனித்துவமான மதிப்பு இருந்தது. சுகந்தனுக்கு அடுத்து 'கந்தையா அண்ணை' மேற்படி யாழ் மாவட்டத்துக்கான அரசியற் பொறுப்பாளராக நியமனமானார். இவரும் எனது அரசியல் மாணவராவார்.
சுகந்தனின் இழப்பு
'சுகந்தன்' இராணுவத்தால் பிடிபட்டு சயனைட் அருந்தி தன்னுயிரை தியாகம் செய்து கொண்டான். என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு மாணவன் என்ற வகையிலும் உன்னதமான மனித பண்புகளைக் கொண்ட ஒரு சமூக கண்ணோட்டம் மிக்கவன் என்ற வகையிலும் அவனது இழப்பு என்னை உலுக்கியது.
சுகந்தனின் நண்பன் கந்தையா அண்ணைக்கு அடுத்து அப்பதவிக்கு 'திலீபன்' நியமிக்கப்பட்டான். திலீபனை 'கந்தையா அண்ணை' என்னிடம் கூட்டிவந்து பல்கலைக்கழக நூலக முன் மண்டபத்தில் வைத்து என்னிடம் அவர் புதிதாக பதவியேற்றுக் கொண்டதை அறிவித்தார்.
நாம் மூவரும் நூலகத்தைவிட்டு வெளியே வந்தோம். அது ஒரு மம்மலான மாலைப் பொழுது. ஆங்காங்கே பல்கலைக்கழக காதல் ஜோடிகள் கூடிப்பேசி மகிழ நிலையெடுத்துக் கொண்டிருக்கும் பின்னணியில் நாம் பல்கலைக்கழக சிற்றூண்டிச் சாலைக்குள் பிரவேசித்தோம்.
அங்கு பல மாணவ-மாணவிகள் விளையாடிக் களைத்துவிட்டு விளையாடிய உடுப்புடன் வேர்வை கசிய தேனீரும் கையுமாய் அட்டகாசத்துடன் களபுள என பேசிக்கொண்டிருந்தனர். நாம் ஓர் ஓரத்தில் அமர்ந்தோம். கொதிக்கும் தேனீரும் சுவைத்தபடி கொதிக்கும் அரசியலை பேசினோம்.
மரணத்தைப் பந்தாடும் துயர்தோய்ந்த அரசியல் தான் காலத்தின் விதியென தெரிந்திருந்தாலும் திலீபனின் அப்பதவியேற்பு நல்லூர் வீதியில் நெருப்பாறாய் ஓடுவதில் முடியுமென்று அப்போது சிறிதும் நினைத்திருக்கவில்லை.
இராணுவமயமான இலங்கை அரசியல்
இலங்கை அரசியல் முற்றிலும் இராணுவமயமாகிவிட்ட காலம் அது. துப்பாக்கிகள் மட்டுமே பேசத் தொடங்கிவிட்ட காலம் அது. எங்கும், எதிலும், எப்போதும் துப்பாக்கிகளே நிர்ணயகரமான பாத்திரம் வகிக்கத் தொடங்கிவிட்ட காலம் அது. இத்தகைய காலப் பின்னணியில் திலீபன் தண்ணீர் குடிக்காது சாகக்கூடும் என்று எண்ணிப்பார்க்க இடம் இருந்திருக்காத காலம் அது.
தேனீர் வயிற்றுள் இறங்குகிறது. வார்த்தைகள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. 'மிகவும் நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தப் பதவியை ஏற்றுள்ளாய்' என்றேன். அப்போது அவன் கூறினான் 'உண்மைதான்', ஆனால் அதுமட்டுமல்ல 'என் வயதுக்கு மீறிய பதவியை பொறுப்பேற்றுள்ளேன்' என்று தன்னியல்புடன் கூறினான்.
திலீபனுக்கு தந்தையும் இரண்டு அண்ணாக்களும் இருந்தனர். தாய் இறந்துவிட்டாள். அவனுக்கு தாயின் அரவணைப்பும் கிடைக்கவில்லை பெண் சகோதரிகளும் இருக்கவில்லை. இதன் பின்னணியில் வளர்ந்த அவனிடம் தாய்மாரின் மீதும் பெண்கள் மீதும் எப்போதும் தனித்துமான மதிப்பும் அன்பும் இருந்தது.
அவன் இயல்பில் ஒரு தூய்மைவாதியாக காணப்பட்டான். புகைத்தல், மதுப்பழக்கம் என்பன சிறிதும் இல்லாதவன் மட்டுமல்ல, அதனை ஒரு கொள்கையாகக் கொண்டு அத்தகைய தீய பழக்கங்களை எதிர்த்தும் வந்தான். அத்துடன் பெண்களுக்கென அவனது மனதில் ஒரு புனிதமான இடம் முழுமையாகவே இருந்தது.
அவனுடன் அதிகம் நெருங்கிப் பழகிய ஓர் ஆசிரியன் என்ற வகையில் இவற்றை என்னால் முற்றிலும் அறுதியிட்டுக் கூறமுடியும்.
இயக்கத்திற்கு பெண்களின் பங்களிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பத்தில் பெண்களை போராட்டத்தில் இணைத்துக் கொள்ளாத ஓர் அமைப்பாகவே இருந்தது.
ஆனால் பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக முடிவெடுக்கப்பட்டதும் அந்த பெண்கள் அமைப்பிற்கான இரகசிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உரும்பிராயில் தோட்டப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஓர் அழகிய வீட்டில் அவர்களுக்கான கூட்டத்தை திலீபன் கூட்டியிருந்தார்.
ஆனால் இதற்கு முன்பே பெண்கள் போராட்டத்தின் மீது அக்கறை கொண்டவர்களாய், இயக்க அனுதாபிகளாய் ஆங்காங்கே அரிதாக செயற்படத் தொடங்கியிருந்தனர்.
இதன் பின்னணியில் குறிப்பாக யாழ்.பல்கலைக்கழத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தனர். இவர்கள் குறிப்பாக திலீபனுடன் அதிகம் தொடர்பில் இருந்ததுடன் குறிப்பிடக்கூடிய செயற்பாட்டையும் கொண்டிருந்தனர்.
அத்துடன் யாழ்.மாவட்டத்திற்கு வெளியே பெண்கள் இராணுவ அர்த்தத்தில் இயக்கத்துடன் இணையும் போக்கும் உருவாகியிருந்தது. இத்தகைய போக்கிற்கு ஊடாக பெண்கள் அமைப்பு உத்தியோகபூர்வமாக பரிணமிக்கத் தொடங்கியது.
இதற்கு முன் ஏனைய இயக்கங்கள் சில பெண்களை போராட்டத்தில் இணைத்திருந்தன. அத்தகைய பின்னணியில் ஆயுதமற்ற பெண்கள் அமைப்பிற்கான மேற்படி கூட்டம் ஒன்றை உரும்பிராயில் திலீபன் நடத்தினார்.
திலீபன் அப்பெண்கள் மத்தியில் உரையாற்றினான். ஆகக்கூடியது மூன்று டசின் வரையான இளம் பெண்கள் அதில் அமர்ந்திருக்கக்கூடும். அவர்கள் அனைவரின் கண்ணிலும் திலீபன் ஒரு 'புனிதராக' காட்சியளித்தான்.
அப்பெண்கள் திலீபனை அன்பாக அண்ணா என்று அழைப்பதும் அவர்களுடன் திலீபன் மிகுந்த மரியாதையுடன் பேசுவதும் திலீபன் முன்பு அவர்கள் பயபக்தியுடன் நடந்து கொள்வதுமாக அக்கூட்டம் அமைந்திருந்தது.
விடுதலை விரும்பி
திலீபன் அறிவியல் மீது ஆர்வம் கொண்டவன். திறமை மிக்கவன், சமூகப் பற்றுள்ளவன், பண்பாட்டை நேசிப்பவன், கண்ணியமானவன், விடுதலை விரும்பி, அர்ப்பணிப்பு மிக்கவன், அயராது செயற்படும் இயல்புள்ளவன், அவனது மணிக்கூட்டில் இரவு என்பது இருக்காது. என்னை அவன் இரவு ஒரு மணி, இரண்டு மணி - பல வேளைகளில் அதைத்தாண்டியும் சந்திக்க வருவான்.
அவன் அடிப்படையில் ஒரு தூய்மைவாதி. இவை அனைத்தும் ஒருபுறம் இருக்கும் போது மறுபுறம் முற்கோபமும் அவசர புத்தியும் கொண்டவன். எல்லாவற்றிற்கும் அப்பால் சமூக நல்லுணர்வுடன் எதற்கும் முன்போகும் இயல்பு கொண்டவன்.
விளையாட்டிலும் ஆர்வமுள்ளவன். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் திறமையுள்ளவன் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஆனால் அது பற்றிய நேரடி அனுபவங்கள் என்னிடம் இல்லை.
அவன் சிறப்பாக மேடையில் உரையாற்றுவான். சொற்களை அழுத்தம் திருத்தமாக பொருள் உணர்ந்து உச்சரிப்பான். பேச்சில் ஒரு கவர்ச்சியிருக்கும். அதற்காக அது இயல்பை மீறியதாக இருக்காது. இலகுவில் யாருடனும் பழகுவான். புழக இனிமையானவன்.
முரண்பாடுகளும் உண்டு...
திலீபனுக்கும் எனக்கும் இடையில் அவ்வப்போது ஏதாவது முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அநேகமாக என்னை அவன் சந்திக்காத வாரம் என்று எதுவும் இருக்காது. ஒருநாள் எனக்கும் அவனுக்கும் இடையில் முரண்பாடு ஒன்று ஏற்பட்டபோது ஒரு மாதமாக என்னை அவன் சந்திக்கவில்லை.
ஆனால் அவனுக்கும் எனக்கும் இடையில் உள்ள அன்பு ஆழமானது என்பதால் என்னிடம் இருந்து அவன் அதிககாலம் விலகியிருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.
ஒருமாதம் கழித்து யாழ்.பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு முன்னால் நான் வந்துகொண்டிருக்கும் போது எதிரே வாகனத்தில் வந்துகொண்டிருந்த திலீபன் என் முன் வாகனத்தை நிறுத்தினான். இருவருக்கும் இடையேயான கோபம் ஆறியிருந்தது.
'வாங்கோ நானும் வாறன். ஐயர் கடையில் தேனீர் குடிப்போம்' என்றான். அதிகம் தேனீர் குடிக்கும் பழக்கமுள்ள நான், அநேகமாக ஒரு மணித்தியால இடைவெளியில் தேனீர் குடிப்பது வழக்கம். அதுவும் ஐயர் கடையை தாண்டும் போது கண்டிப்பாக நான் தேனீர் குடிப்பேன் என்பது திலீபனுக்குத் தெரியும்.
அதேவேளை ஒருமாதகால கோபத்துக்கு மருந்தாக அவன் தேனீரை தெரிவு செய்துள்ளான் என்பதையும் உணர்ந்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். அவன் தேனீர் கடை நோக்கி வாகனத்தை திருப்பினான். அந்த இடத்தில் இருந்து தேனீர்க்கடை சுமாராக 100 யார் தொலைவில் இருக்கும்.
தேனீர் கடையில் ஓர் இளம் பெண் கல்லாப்பட்டறையில் அமர்ந்திருப்பாள். அவள் போராட்டத்திற்கு பலமாக ஆதரவு அளிக்கும் பெண் மட்டுமல்ல, குறிப்பாக எம்மீது பெரிதும் அன்பு கொண்டவளுங்கூட. அவள் திலீபனைக் கண்டதும் 'கனகாலத்திற்குப் பிறகு...' என்று கூறினாள். 'ஓம் அக்கா' என்று திலீபன் சிரித்தபடியே பதில்கூறி கதையை முடித்துவிட்டான்.
எமது ஒருமாதகால 'கோபம்' அவளுக்குத் தெரியாது. அவள் அதனை இயல்பாகத்தான் கேட்டாள். தேனீரும் வடையும் உட்கொண்டோம். திலீபன் பணம் செலுத்த முற்பட்டான். அப்போது அவள் திலீபனிடம் கூறினாள் 'அது சேரின் கணக்கில் எழுதப்பட்டுவிட்டது' என்றாள். அத்தோடு ஒருமாத கோபமும் முடிவுக்கு வந்தது.
திலீபனுக்கு இளைஞர்கள் செலுத்தக்கூடிய காணிக்கை
திலீபனுக்கு பெண்கள் மீது இருந்த அதியுயர்ந்த மதிப்பும் மற்றும் போதைப் பொருட்கள் மீது அவனுக்கு இருந்த பெருவெறுப்பும் அப்பழுக்கற்றவை. திலீபனது இந்த நினைவுநாட்களில் அத்தகைய நினைவின் பேரால் போதைப்பொருள் பாவனையை கைவிடவும், அத்தகைய தீயபழக்கத்தை எதிர்க்க முனைவதுமே திலீபனுக்கு இளைஞர்கள் செலுத்தக்கூடிய காணிக்கையாகும்.
தற்போது முழு இலங்கையிலும் அதிகூடிய மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை கொண்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக மட்டுமன்றி அது எமது பண்பாட்டு இதயத்தின் மீது விழுந்த ஒரு பேரிடியாகவும் காணப்படுகிறது.
சாகும்வரை உண்ணாவிரதம்
திலீபனும் அவனது நெருக்கமான சகாவான ராஜனும் என்னை திடீரென சந்தித்தனர். நான் சாரத்துடன் ஆனால் மேற்சட்டை அணியாதிருந்தேன். 'என்ன அவசரம்' என்று கேட்டேன். இயல்பில் திலீபன் பொறுமையற்றவன். ஆனால் நான் கேட்டபின்புதான் அவன் வாய்திறக்க தொடங்கினான்.
'நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன், என்ன நடக்கும்?' என்று கேட்டான். எனக்கு வார்த்தைகள் வர நேரம் எடுத்தன. எப்படியோ உரையாடல் தொடர்ந்தது. அவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதை ஏற்க மறுத்தேன்.
இந்த உரையாடலின் உணர்வுகளை உயிர்த்துடிப்புடன் பகிர்ந்து கொள்ளக்கூடியவராய் தற்போது மேற்குநாடு ஒன்றில் வாழும் அவரது சகாவான ராஜன் உள்ளான்.
இதனை எழுதுவதற்கு சில தினங்களுக்கு முன் ராஜனுடன் தொலைபேசி வாயிலாக நான் உரையாடினேன். அவன் அந்த உரையாடல்களையும், உணர்வுகளையும் அப்படியே பசுமையாக சுமந்து வைத்திருப்பது தெரிந்தது.
உரையாடலின் ஒரு கட்டம் இவ்வாறுதான் அமைந்தது. 'சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற உனது முடிவை ஏற்க முடியாது. அதற்குப் பதிலாக கட்டம் கட்டமாகவும், அணியணியாகவும் சங்கிலித் தொடர் உண்ணாவிரதங்களை மேற்கொள்ளலாம்.
ஓர் அணிக்குப்பின் இன்னொரு அணியென மூன்று நாள் இடைவெளியில் கட்டம் கட்டமாக உண்ணாவிரத்தை மேற்கொள்வதுதான் நல்லது. இப்படிச் சாகும்வரை உண்ணாவிரதம் வேண்டாம். அப்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்காது கட்டம் கட்டமாக இருப்பதன் மூலம் மக்களை அதில் பங்கெடுக்கச் செய்யவும், அணிதிரட்டவும் முடியும்.
இந்திய இராணுவம்
இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ள சூழலில் இத்தகைய தொடர் உண்ணாவிரத போராட்டமுறை பயனளிக்க வல்லது. சாகும்வரை உண்ணாவிரதம் என்பது அடுத்த கட்டமற்ற இன்னொரு பெரும் முடிவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்' என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தேன். (இது உரையாடலின் சாராம்சமே தவிர அப்படியே அதே வார்த்தைப் பிரியோகங்கள் அல்ல.)
அப்போது இலங்கையில் மூன்று பௌத்த நிகாயங்களையும் சேர்ந்த இரண்டு பெரும் பௌத்த பீடங்களையும் உள்ளடக்கிய சுமாராக 13,000 பௌத்த பிக்குகள் இருந்தனர். இதனை திலீபனிடம் சுட்டிக்காட்டி பின்வருமாறு கூறினேன். நிச்சயம் உன்னை சாகவிடுவார்கள்.
மேற்படி 13,000 பிக்குக்களும் இதுபோன்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தெற்கில் தொடங்கவிடாது தவிர்க்க வேண்டுமென்றால், உன்னைச் சாகவிடவேண்டியது இரண்டு அரசுகளுக்கும் அவசியம்.
ஆதலால் கண்ணை மூடிக்கொண்டு உன்னை சாகவிடுவார்கள். சாவின் பின்பு நிலைமை அடுத்த கட்டத்திற்கு இடமின்றி பெரிதும் குழம்பும். அதற்குப் பதிலாக தொடர் உண்ணாவிரத முறையே அடுத்த கட்டத்திற்கு நிலைமையை வளர்த்துச் செல்லும். உன்னை இழக்க முடியாது. இந்த முடிவை கைவிடு என்றேன்.
திலீபனின் பிரசங்கம்
இதனை முதலாவதாக என்னுடன்தான் கதைப்பதாக திலீபன் கூறினான். இனிமேற்தான் மேற்கொண்டு அடுத்த நடவடிக்கை என்றான். அப்படியென்றால் நல்லது, மேற்கொண்டு யாருடனும் கதைக்காமல் இத்துடன் நிறுத்திவிடு என்று பலவறாக கூறி வற்புறுத்தினேன்.
அவன் கரும்புலி மில்லரை நினைவு கூர்ந்து ஒரு பிரசங்கத்தையே எனக்குச் செய்தான். அதன் சாராம்சம் பின்வருமாறு அமைந்தது.
மில்லருக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது தான் என்றும் அவ்வாறு அவனுக்கு தான் இறுதிவிடை கொடுக்கும் தருணத்தில், மில்லர் தன் சட்டைப் பைக்குள் இருந்த பணத்தை எல்லாம் உருவியெடுத்து அதற்கு குளிர்பானம் (Coco-Cola, Fanta) வாங்கி தன்னுடன் நின்ற ஏனைய போராளிகளுக்கு கொடுக்குமாறு கொடுத்ததாக கூறினான். (அப்போது போராளிகள் மேற்படி குளிர்பானங்களை அருந்துவதில் கட்டுப்பாடுகள் இருந்தன.)
இறுதியாக கரும்புலி மில்லர் தன்னிடமிருந்து இறுதி விடைபெறும்போது மில்லரைப் பார்த்து தான் பின்வருமாறு கூறியதாக என்னிடம் கூறினான்.
அதாவது 'நீ முன்னாலே போ, நான் பின்னாலே வாறேன்'. இவ்வாறு தான் வழியனுப்பி வைத்த பொறுப்புக்கு ஏற்ப தான் போராட்டத்தை இன்னொரு வடிவில் தொடர்வதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதிபடக் கூறினான்.
நிச்சயிக்கப்பட்ட மரணம்
'சாவு நிச்சயம்' என்று நான் கூறியதை அவன் ஏற்றுக்கொண்டான். ஆனால் அவன் தன் முடிவில் மாற்றம் செய்ய தயாராக இருக்கவில்லை.
அடுத்து அவன் தலைமைப்பீடத்தை நாடப்போவதாக என்னிடம் கூறிவிட்டு புறப்பட்டான்.
இதன் பின்பு நடந்தவற்றை ராஜன் பின்வருமாறு என்னிடம் கூறினான். 'தலைவர் இதற்குச் சம்மதிக்கமாட்டார்' என்று ராஜன் திலீபனிடம் கூறியபோது அதற்கு திலீபன் பின்வருமாறு பதில் கூறினான். 'எப்படியும் நான் அண்ணையிடம் சம்மதம் பெற்றுவிடுவேன். வா அண்ணையிடம் போவோம்' என்றானாம்.
பின்பு திலீபனும், ராஜனும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள அவரது மறைவிடத்திற்குச் சென்றனர். திலீபன் மட்டும் அவரை உள்ளே சென்று சந்தித்தான். ராஜன் வெளியே காவல் நின்றான். சுமாராக ஒரு மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட உரையாடலின் பின்பு வெளியே வந்த திலீபன் அனுமதி பெற்றுவிட்டதாக ராஜனிடம் கூறினான்.
திலீபனின் தியாகம்
நான் எனது சோகத்தில் இருந்து சிறிதும் மீளவில்லை. திரு.மாத்தையாவை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இருந்த இயக்கத்தின் வெளிப்படையான முகாமின் வாசலில் கண்டேன். இருவரும் கதைக்கத் தொடங்கினோம்.
வாசலில் வெளியே வந்துகொண்டிருந்த மாத்தையா 'வாங்கோ உள்ளே போய் இருந்து கதைப்போம்' என்றார். சாகும்வரையான உண்ணாவிரத முடிவை கண்டிப்பாக கைவிட வேண்டும் என்றேன். எனது தரப்பு கருத்துக்கள் அனைத்தையும் கூறினேன். திலீபன் மரணம் அடையப் போவது உறுதி என்பதையும் கூறினேன்.
மாத்தையா தனக்குரிய கருத்துக்களைக் கூறி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது தவிர்க்க முடியாது என்றார். எனக்கு பசிக்க மறுத்தது. தேனீரைத் தவிர வேறு எதனையும் என்னால் உட்கொள்ள முடியவில்லை.
கவிஞர் சு.வில்வரத்தினம் நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னை பார்க்க வந்தார். 'திரு, என்ன முகம் காய்ந்திருக்கிறது. இன்னும் சாப்பிடவில்லையா' என்று கேட்டார். அவர் எனது மதிப்புக்குரிய நண்பர். அவரை வில்வண்ணை என்றே அழைப்பேன். அவருடன் மனம் திறந்து பேசுவது எனக்கு மன ஆறுதலைத் தரும் என்பது எனக்குத் தெரியும்.
அப்போது திலீபன் உண்ணாவிரதம் இருக்கப் போகும் கதையை சொல்லத் தொடங்கினேன். சாவு நிச்சயம் என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறினேன்.
நான் காரணத்தைக் கூறி கட்டாயம் திலீபனைச் சாகவிடுவார்கள் என்று கூறியதும் எனது விளக்கத்தில் நம்பிக்கை கொண்ட கவிஞர், 'ஆமாடா' என்று வட்டார வழக்குச் சொல்லில் கூறியவாறு தன் இரண்டு கண்களையும் மேலே உயர்த்தியவாறு தனது ஒரு கையால் தன் நெஞ்சை அமர்த்தியவாறு 'சுவாமி, தாயில்லாப் பிள்ளை' என்று கூறி தன் ஆத்மீகக் குருவை வணங்கியவாறு சோகத்தில் அமர்ந்தார்.
You may like this video

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
