சர்ச்சைக்குரிய கொலைகள் குறித்த அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரும் ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையின் சர்ச்சைக்குரிய கொலைகள் மற்றும் கலவரங்கள் தொடர்பான அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு கோரிக்கை இலங்கையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய அனைத்து கொலைகள் மற்றும் கலவரங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கோரியுள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கைகள்
1994க்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அவற்றின் விசாரணைகள் பற்றிய தகவல்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் விஜய குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீர ஆகியோரின் கொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கைகள், அனைத்தும் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், அவற்றை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புத்திக பத்திரண வலியுறுத்தியுள்ளார்.
இந்த போராட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டுமென புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச் செயல்கள் சில தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி பிரதான கூட்டணி கட்சியான ஜே.வி.பி மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |