நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்! எரிபொருளுடன் வந்தடைந்த இரு பவுசர்கள்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவை கடல்வழியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இதற்கமைய, நேற்று(25) புதன்கிழமை இரண்டு எரிபொருள் பவுசர்களில் மொத்தமாக 39,600 லீற்றர் எரிபொருள் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரச நிதியூடாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 13,200 லீற்றர் டீசல், 19,800 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 6,600 லீற்றர் பெற்றோல் ஆகியவை கொண்டுசெல்லப்பட்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளன.

குறித்த எரிபொருட்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து கடற்படையினரின் தரையிறங்கு கலத்தில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பான முறையில் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
நெடுந்தீவில் இதுவரை நிரந்தரமான எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.
இதனால் போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.
நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி நிகழ்வின்போது இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அண்மையில் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து ஒப்பந்தகாரரால் கையளிக்கப்பட்டிருந்தது.

தற்போது எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான முக்கியமான கட்டம் எட்டப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

