தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பில் சுவிற்சர்லாந்து இந்துசைவ திருக்கோவில்கள் ஒன்றியம் கண்டனம்
தொல்லியல் திணைக்களம் எனும் பெயரில் இலங்கை அரசு தமிழரின் பூர்வீக நிலங்களைக் கையகப்படுத்த முயல்வதையும், வழிபாட்டு இடங்களில் அடியார்களையும் நிர்வாகிகளையும் கைதுசெய்து சிறையில் அடைப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சுவிற்சர்லாந்து இந்துசைவ திருக்கோவில்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்து இந்துசைவ திருக்கோவில்கள் ஒன்றியம் நேற்றுமுன்தினம் (15.03.2024) வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,
ஈழத்தமிழ் மக்களின் பூர்வீக சமயம் சைவசமயம். சைவசமய பழக்கவழக்கங்களை நாம் காலங்காலமாக பின்பற்றி வாழ்வதோடு தாய்கு நிகராக எம் சமயத்தையும் எம் மண்ணையும் நேசிக்கின்றோம்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஈழமணித் திருநாட்டில் இராவணன் காலம் முதல் இலங்கை முழுவதும் பெரிய, சிறிய சைவ ஆலயங்கள் அமைத்து தமிழ் மக்களின் வாழ்வியல் பண்பாட்டைப் பேணி வாழ்ந்து வருகின்றோம்.
உயிருக்கு நிகரான திருக்கோவில்கள்
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது எமது வேதவாக்கு. இந்தியாவில் எவ்வாறு தொன்மையான சைவ ஆலயங்கள் அமைந்திருக்கின்றதோ அவ்வாறே ஈழத்திலும் மிகத்தொன்மை வாய்ந்த ஆலயங்கள் பலவுள்ளன. இவற்றிற்பல எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களினால் அழிக்கப்பட்டபோதும் மீள எம் மக்களால் கட்டியெழுப்பப்பட்டு அதன் வரலாறு தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றது.
இவ் ஆலயங்களின் கீர்த்தியை சைவ சமயத்தின் முதல்வர்களாக கருதப்படும் சமய குரவர்கள் நினைத்து வணங்கி ஆலயங்கள் மீது தேவாரம் பாடியுள்ளார்கள். நாம் இன்றும் இத்தேவாரங்களை பக்திப்பரவசமாக பாடி மகிழ்கின்றோம். இத்திருக்கோவில்களை இன்றும் உயிருக்கு நிகராகக் காத்து வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.