பிரித்தானியாவில் 53 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதம் அதிகூடிய வெப்பநிலை பதிவானது!
53 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானியாவில் மார்ச் மாதம் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், கோவிட் - 19 கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, இன்று பிற்பகல் லண்டனின் கியூ கார்டனில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், அங்கு 24.5C (76.1F) வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 1968ம் ஆண்டு கேம்பிரிட்ஜ்ஷையரின் மேபாலில் 25.6C (78F) வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதுவே அங்கு மார்ச் மாதம் பதிவாகியிருந்த அதிகூடிய வெப்பநிலையாகும்.
இதனிடையே, நாட்டிங்ஹாமில் ஒரு பூங்காவில் ஏராளமான மக்கள் ஒன்று கூடிய நிலையில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
பெருமளவான மக்கள் ஒன்று கூடிய போதிலும் சமூக இடைவெளியை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஏராளமான குப்பைகளை விட்டுச் சென்றுள்ளதாகவும், இதனால் இன்று முதல் பூங்காக்களுக்குள் நுழையும் நபர்களிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகர பிதா டேவிட் மெலன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுகாதார செயலாளரும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சூரிய வெப்பத்தை அனுபவிப்போம். எனினும், அதனை பாதுகாப்பாக மேற்கொள்வோம். நாங்கள் இதுவரையில் கடந்து வந்ததை வீண் செய்துவிடக் கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் டவுனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இதே போன்ற கருத்தினை தெரிவித்திருந்தார்.
“விளையாட்டு அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு அழகான வானிலையை பிரித்தானிய மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தான் நம்புகின்றேன்.
எனினும், அதனை எச்சரிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
மக்கள் இவ்வளவு காலமாக காட்டிய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை தான் வலியுறுத்துவதாகவும்” பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.