12 வாரங்களாக தொடரும் உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு போராட்டம் - அநுர அரசிடம் முக்கிய கோரிக்கை
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம், தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி. பிரதிநிதிகளுக்கு இருக்கின்ற நிலையில் எமது மக்களை ஏமாற்றப்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உயர் பாதுகாப்பு வலயங்கள்” என்ற அடிப்படையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு முன்னெடுக்கப்படுகின்ற மயிலிட்டிப் பிரதேச மக்களின் அமைதிவழப் போராட்டம் இன்று(10.07.2026) 12 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு தார்மீக ரீதியிலான ஆதரவை வழங்கும் வகையில், போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் என்ற கோட்பாட்டினை முன்வைத்து கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் பலத்திற்கமைய, பல்லாயிரக்கணக்கான தனியார் காணிகளை கட்டம் கட்டமாக விடுவித்து வந்தோம்.
அநுர அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்தினர், மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி வாக்குளைப் பெற்றுக் கொண்டனர். ஆனால், தற்போது தங்களுடைய வாக்குறுதியை மறந்து ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி ஒரு கருத்தினை தெரிவிக்கின்றார்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மற்றுமொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார், அந்தக் கட்சிய சார்பாக எமது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் வேறுவிதமான கதையை சொல்கின்றார்கள்.
இவ்வாறு எங்களுடைய மக்களை ஏமாற்றாமல் காணி விடுவிப்பு தொடர்பான உண்மையான நிலைப்பாட்டினை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் எங்களுடைய மக்களின் வாக்குகளைப் பெற்றக்கொண்ட ஜே.வி.பி. பிரதிநிதிகள், வெறுமனவே தங்களுடைய கட்சியின் அரசியலையும் வேலைத் திட்டத்தினையும் எமது மக்களிடம் எடுத்து வருகின்ற துதுவர்களாக இருக்காமல், எங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புக்களை தென்னிலங்கைகுக்கு எடுத்துச் செல்கின்ற எமது மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
இந்நிலையில், எங்களைப் பொறுத்தவரையில் தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்ற சாத்வீகப் போராட்டங்கள் அனைத்திற்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் தார்மீக ஆதரவு தொடரும் என்பதை தெரிவித்துக்கு கொள்கின்றோம் என்றார்.
இப்போராட்டத்தின் இறுதியில் ஏற்பாட்டாளர்களினால், தங்களுடைய அபிலாசைகளை வெளிப்படுத்திய மனு ஒன்றும் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan