ஜனாதிபதி கோட்டபாயவிடம் பொய்யான தகவல்களை வழங்கிய உயர் அதிகாரி
புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40 ரயில் பெட்டிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தமை உண்மைக்கு புறம்பானது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே பொது மேலாளரின் தகவலுக்கமைய, 40 பெட்டிகள் அல்ல 31 பெட்டிகள் மாத்திரமே செயற்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நேரங்களில் பெட்டிகளை தொழில்நுட்ப ரீதியாக இயக்க முடியாது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருதானை நிலைய அதிபர்கள் சங்கத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், இந்திய கடனுதவியுடன் கொண்டுவரப்பட்ட 10 M11 ரக இயந்திரங்களில் ஏழு இயந்திரங்கள் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்த கருத்து தவறானது எனவும் அவற்றில் மூன்று இயந்திரங்களே இயங்குவதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
நிலைய அதிபர்களின் குற்றச்சாட்டை நிராகரித்த புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அனைத்து 07 M11 இயந்திரங்களும் இயங்குவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் கடந்த திங்கட்கிழமை போக்குவரத்து அமைச்சின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட கோளாறுகளை நிவர்த்தி செய்து அதனை விரையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரயில்வே பொது முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.