உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பது தொடர்பிலான வழக்கு தள்ளுபடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை, அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்று கோரி சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, சட்டச்செலவுகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவு நேற்று (12) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
ரணிலின் பரிந்துரை
குறித்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை, அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்று கோரி சட்டத்தரணி ஒருவரினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
அத்துடன், அரசியலமைப்பு பேரவையின் மூன்று உறுப்பினர்களுக்கு 1.5 மில்லியன் ரூபாயை செலுத்துமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதில் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்புச் சபைக்கும் எந்தத் தடையும் இல்லை என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |