மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் நடந்தே தீரும் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது: சுவீகரன் நிசாந்தன்
மாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள். எனவே ஆகுதியான மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுப்பூர்வமாகச் சுடரேற்றி நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது எனத் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
எம் இனத்தின் விடுதலைக்கான உன்னதமான எழுச்சிமிகு போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்த போதும் துயிலும் இல்லங்களில் இருக்கும் போராட்ட காலங்களில் ஆகுதியான மாவீரர்களின் கல்லறைகளை அதே பன்னிரெண்டு வருடங்களாகவே இலங்கை இனவாத அரசு இடித்தொழிக்கும் செயற்பாடுகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என்பதை மன்னார் ஆட்காட்டி துயிலும் இல்லத்தின் உடைப்பு வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றது.
இதனைத் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையான கண்டிக்கின்றது. இலங்கை இராணுவத்தினதும், அரச, இராணுவ புலனாய்வாளர்களதும் மிலேட்சத்தனமான செயற்பாடாகத் தொடர்வது ஏற்கனவே இடித்தொழித்த துயிலுமில்ல கல்லறைகளின் சிறு பாகங்களைக் கூட ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உடைத்தெறியும் செயற்பாடுகள் ஒரு புறமாகவும், தமிழ்த் தேசிய பரப்பில் முன்னின்று செயற்படும் செயற்பாட்டாளர்களை, அவர்களது குடும்பத்தினரை, ஆதரவாளர்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்துவதும், பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்புக்கு அழைத்து மிரட்டுவதும், பின் தொடர்வதும் மறுபுறத்தில் இலங்கை காவல்துறை மூலமாகத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்து அதன் மூலமாக நினைவேந்தல்களுக்கான தடையுத்தரவுகளையும் பெறுவதும், அச்சுறுத்துவதுமாக இலங்கை பேரினவாத அரசின் மிலேட்சத்தனமான அராஜகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இலங்கை பேரினவாத அரசே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களாகிய நாம் எம் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை இப்பொழுது மட்டுமல்ல இந்த உலகில் மானிடம் உள்ளவரைப் பல தலைமுறை தாண்டியும் நினைவில் கொள்வோம்.
ஆகவே நீங்கள் இடித்தொழிக்க வேண்டியது துயிலும் இல்லங்களை அல்ல உலகத் தமிழர்களின் இதயங்களையும், உணர்வுகளையுமே முடிந்தால் அதை செய்யுங்கள் அப்பொழுது தமக்கான உரிமையைக் கேட்டுப் போராடிய ஒரு இனத்தை அழித்த சிங்கள அரக்கர்களாகப் புத்தரின் வரலாறு இந்த உலகில் மாற்றமடையட்டும்.
தமிழர்களாகிய நாம் இந்த நாட்டில் பல தசாப்த காலங்களாகச் சிங்கள பேரினவாதிகளான நீங்கள் எங்கள் மீது புரிந்த அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும், ஆள்கடத்தல்களையும் படுகொலைகளையும் எம் கண்முன்னே பார்த்து இவற்றையெல்லாம் கடந்துதான் இன்றும் வாழ்ந்துவருகின்றோம்.
ஆகவே உங்களுக்கு வேண்டுமென்றால் ஒவ்வொரு ஆட்சியும், ஆட்சியாளர்களும் மாறும் போது இது புது புது விடயங்களாகத் தென்படலாம் ஆனால் எங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தும் பழகிய ஒன்றுதான். எனவே தமிழர்களாகிய நாம் எக்காலத்திலும் இவற்றைக் கண்டு அஞ்சப்போவதில்லை.
ஆகவே வழமை போன்று மாவீரர் நினைவு நாளில் ஆகுதியான மாவீரர்களுக்கு அவர்களின்
உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள துயிலும்
இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுப்பூர்வமாகச் சுடரேற்றி
நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த
முடியாது என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam