அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து - இருவர் பலி
அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் பரவி வரும் பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க வன சேவைத் திணைக்களத்தின் ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்பட்ட 'சிகோர்ஸ்கி எஸ்-64 ஸ்கைக்ரேன்' ரக ஹெலிகொப்டரே, ரிச்ஃபீல்ட் பகுதிக்கு அருகில் உள்ள வைட்மௌத் 2 காட்டுத்தீ எல்லைப் பகுதியில் நேற்றுமுன் தினம் விபத்துக்குள்ளானது.
24 மணித்தியாலங்களுக்கு சடலங்கள் மீட்பு
கடுமையான தீப்பரவல் மற்றும் கரடுமுரடான மலைப்பகுதி காரணமாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை உடனடியாகச் சென்றடைவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, விபத்து நடந்து 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகிய நிலையிலேயே சனிக்கிழமையன்று உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மின்னல் தாக்கியதன் காரணமாக கடந்த ஜூலை 27 ஆம் திகதி ஃபிஷ்லேக் தேசிய வனப்பகுதியில் ஆரம்பமான இந்த காட்டுத்தீ, இதுவரை 111,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்து சாம்பலாக்கியுள்ளது.
தீ பரவலால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது வரை தீயின் 24 சதவீதமான பகுதி மட்டுமே கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பலத்த காற்றினால் தீ மேலும் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
காட்டுத்தீயை அணைக்கும் பணி உலகின் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட யூட்டா மாநில ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த கோடைகாலத்தில் யூட்டா மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது பலிச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற காட்டுத்தீ அசம்பாவிதங்களில் நான்கு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.