நாட்டில் 300 முதியோர் இல்லங்கள் ஆபத்தில்! அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள்..
நாட்டில் பதிவு செய்யப்படாத 300க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதுன் தெரிவித்துள்ளார்.
தற்போது 456 முதியோர் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்படும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை 148 ஆகும்.
பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள்
இதுவரை பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களைப் பதிவு செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி நடத்துமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக குறித்த முதியோர் இல்லங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதற்கும் அக்காலப்பகுதிக்குள் பதிவு செய்யப்படாத இல்லங்கள் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் தீர்மானித்துள்ளது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முதியோர் இல்லங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தைத் தீர்மானித்து இதுவரை பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் அது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதுன் குறிப்பிட்டுள்ளார்.