ஜனாதிபதி அநுர 18 மாதங்களில் நிகழ்த்திய சாதனை: 'வெரிட்டே ரிசர்ச்' நிறுவனத்தின் ஆய்வு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திட்டங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான சட்டமூலங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது 18 மாத கால காலத்தில் நிறைவேற்றியுள்ளதாக 'வெரிட்டே ரிசர்ச்' (verite research ) நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஊழல் மற்றும் மோசடிகளை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கும் சிறந்ததொரு நல்லாட்சியை உருவாக்குவதற்கும் இந்நாட்டு மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் வாக்களித்துள்ளனர்.
அதில் ஒரு சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேனவும் மற்றைய சந்தர்ப்பத்தில் அநுரகுமார திசாநாயக்கவும் ஜனாதிபதியாக தெரிவாகினர்.
18 மாதத்தில் நிகழ்த்திய சாதனை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 126 நாட்கள் ஆட்சிக் காலத்தில் 54 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு 48 சட்டமூலங்களைச் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவற்றில் 20 சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் 'வெரிட்டே ரிசர்ச்' தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது 136 நாட்களில் 50 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு 43 சட்டமூலங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவற்றில் 32 சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதிகள் இருவரினதும் முதல் ஆறு மாத காலப்பகுதியைக் கருத்திற் கொள்ளும்போது அதிகளவிலான சட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நிறைவேற்றியுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 41 நாட்கள் காலத்தில் 17 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு 16 சட்டமூலங்களைச் சபைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவற்றில் 6 சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 46 நாட்களில் 7 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு 5 சட்டமூலங்களைச் சபைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவற்றில் மூன்று சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.