மத்திய மலைநாட்டில் கடும் மழை! நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு - மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகின்றது.
இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருவதுடன், பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
நீர்ப்போசனைப் பிரதேசங்களில் பெய்து வரும் கனமழையால், நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளிலும் சுமார் ஐந்து அங்குல உயரத்திற்கு நீர் வான்பாய்ந்து வருகின்றது.

இதனையடுத்து, களனி ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, குறித்த நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சீரற்ற காலநிலை
மேலும், தொடர் மழையினால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளின் பல இடங்களில் அடிக்கடி பனிமூட்டம் நிலவுகின்றது.

இதனால், குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, தமக்குரிய பாதையில் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam