வள்ளிபுனத்தில் கடும் வெள்ளம்: அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் இடைக்கட்டு முதன்மை வீதியினை வெள்ளம் மூடியுள்ளது.
இடைக்கட்டு வீதியின் அருகில் உள்ள ஒரு சிறிய குளம் ஒன்று வெள்ளத்தால் நிரம்பியுள்ளது.
வெள்ள அனர்த்தம்
இந்த குளத்தின் மேலதிக நீர் தனியார் காணி ஒன்றின் ஊடாகவே கடந்த காலத்தில் வழிந்தோடிவந்த நிலையில் குறித்த தனியார் காணி மண்போட்டு நிரப்பப்பட்டுள்ளதால் மழைவெள்ளம் வழிந்தோட முடியாத நிலையில் வீதியினை மூடியுள்ளதுடன் மக்களின் வீடுகள் மற்றும் வயல் நிலங்களுக்குள் புகுந்து நிரம்பிக்கொண்டுள்ளது.
பிரதேச சபைக்கு சொந்தமான இடைக்கட்டு முதன்மை வீதிக்கான வடிகாலமைப்பு சரியாக செய்து கொடுக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் இடர் குறித்து அனாத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் தலைமையிலான குழுவினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குகனேசன் உள்ளிட்டவர்கள் மக்களின் நிலமைகளை பார்வையிட்டுள்ளதுடன் தற்காலிகமாக நீர் வழிந்தோடக்கூடிய வகையில் கனரக இயந்திரம் கொண்டு சீர்செய்துள்ளார்கள்.
மக்கள் கோரிக்கை
கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் 15 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளித்தில் மூழ்கிஅழிவடைந்துள்ளன.
பிரதேச சபை மற்றம் பிரதேச செயலக அதிகாரிகள் இடைக்கட்டு வீதிக்கான சரியான வடிகாலமைப்பினை மேற்கொண்டு தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமாக இருந்தால் அதிகளவான குடும்பங்கள் இடம்பெயரவேண்டிய
நிலைக்கு தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.



