நிறைமாத கர்ப்பிணியை நாட்டைவிட்டு வெளியேற்ற துடிக்கும் பிரித்தானியா: வலுக்கும் எதிர்ப்பு
எரித்திரியாவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பெண் ஒருவரை ருவாண்டாவிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்ற உள்விவகார அமைச்சகம் அச்சுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துவரும் மனித உரிமை ஆர்வலர்கள், பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்தின் இந்த திட்டமே மிகவும் மோசமான, கொடூரமான ஒன்று என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தில் தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சமீப காலத்தில் புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் மக்களை வலுக்கட்டாயமாக ருவாண்டாவிற்கு அனுப்பி வைப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறாதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படும் சூழல்
பலாத்காரத்திற்கு இலக்கானவரும் தற்போது 37 வார கர்ப்பிணியுமான அந்த 28 வயது பெண் வெளியேற்றப்படும் அச்சுறுத்தல் காரணமாக கடுமையான மனக்குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஜூலை மாதம் சிறிய படகு ஒன்றில் பிரித்தானியா வந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை உள்விவகார அலுவலக அதிகாரிகள் தெரிந்துகொண்டனர். இதனையடுத்து அவருக்கு கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டுமின்றி, அவர் தங்கவைக்கப்பட்டிருந்த ஹொட்டலில் இருந்து, கர்ப்பிணி என்பதால் இன்னொரு வசதியான ஹொட்டலுக்கும் மாற்றியுள்ளனர்.
சூடானில் குடியேற்றம்
ஆனால் தற்போது ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படும் சூழல் எழுந்துள்ளதால் மனமுடைந்து போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் அவரது தந்தை கொல்லப்பட்ட பின்னர் தனது மூன்று வயதில் எரித்திரியாவிலிருந்து தனது தாயுடன் தப்பி ஓடியுள்ளார். முதலில் சூடானில் குடியேறிய இவர்கள் அங்கிருந்து லெபனான் சென்றுள்ளனர்.
தற்போது ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவதாக வந்த தகவல் தம்மை மொத்தமாக உலுக்கியுள்ளதாகவும், வயிற்றில் ஒரு பிள்ளையுடனும், தாம் அனுபவித்த வலி ஏதும் தனது பிள்ளை இனி அனுபவிக்காது என்ற நம்பிக்கையில் பிரித்தானியா வந்ததாகவும், ஆனால் தமது கனவும் பிறக்கவிருக்கும் பிள்ளையின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அவர் கண்கலங்கியுள்ளார்.
இவரது விவகாரத்தை குறிப்பிட்டு போராடி வரும் தொண்டு நிறுவனம் ஒன்று, நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நமது பிரித்தானியா அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.