மட்டு. போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.. சுகாதார சிற்றூழிய பெண் கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த சுகாதார சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வரும் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தாயாரான சிற்றூழிய பெண், சம்பவ தினமான 22 வழமைபோல வைத்தியசாலையில் கடமையாற்றி வந்துள்ளார்.
குழந்தை பலி
இதன்போது அவருக்கு வயிறு வலிப்பதாக அங்குள்ள மலசலகூடத்திற்கு சென்று ஒருவருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு அங்கு கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு இரத்த போக்கு அதிகரித்ததையடுத்து அவரை அவதானித்த தாதியர் ஒருவர் அவரை வார்டில் அனுமதித்த நிலையில் அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் குழந்தை பெற்றுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர். குறித்த சிற்றூழியரின் கணவரும் அந்த வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வருவதாகவும் கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக கணவனை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பெண் கர்ப்பம் தரித்து முழுமையாக 38 வாரங்கள் கொண்ட 2 கிலோவும் 485 கிராம் நிறை கொண்ட பெண் குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



