குறைந்த விலையில் மது உற்பத்திக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு
குறைந்த விலையில் மதுபான வகைகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ துறைசார் அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை மது வரித் திணைக்களம் குறைந்த விலையில் மதுபான வகை என்ற அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
சட்டவிரோதமாக மதுபானங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் இந்த மலிவு விலையில் மதுபான உற்பத்தி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு குறைந்த விலையில் மதுபான வகை உற்பத்தி செய்வது ஆபத்தானது எனவும் இது மதுபான நுகர்வை அதிகரிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த திட்டத்தின் ஊடாக சட்டவிரோத மதுபான பயன்பாட்டை தடுக்க முடியாது என சுட்டிக்காட்டி உள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோத மது பயன்பாட்டை குறைக்கவும் அரச வருமானத்தை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மதுபான நுகர்வினை குறைக்கவில்லை எனவும் அது மதுபான பயன்பாட்டை அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 1996 ஆம் ஆண்டில் பியர் வகைகளுக்கான வரி 50 வீதத்தினால் குறைக்கப்பட்டதாகவும் இதன்போது பியர் நுகர்வு 200% அதிகரித்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மதுபான வகைகளுக்கு வரி விதித்தல், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாகவே சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான மதுபானமாக இருந்தாலும் அவற்றை ஊக்குவிப்பதனை எதிர்ப்பதாக அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.