வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்களை வரவழைப்பது சாத்தியமில்லை: சுகாதார அமைச்சு திட்டவட்டம்
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மருத்துவ நிபுணர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
இது சாத்தியமான தீர்வாகாது என்பதனால் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என சுகாதாரத்துறையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மருத்துவ நிபுணர்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஓய்வூதிய வயது நீடிப்பு
முதலாவதாக, நிபுணர்களுக்கான ஓய்வூதிய வயது 60 இலிருந்து 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வு பெற்ற நிபுணர்கள் இப்போது மாற்று நிபுணரை நியமிக்கும் வரை வைத்தியசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தநிலையில் வைத்தியர்கள், நிபுணர்களாக வருவதற்கு, அவர்களுக்கான அதிக பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
எனினும் இந்த செயல்முறை குறைந்தது ஐந்து வருடங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை வைத்திய நிபுணர்களின் வெற்றிடப்பிரச்சினை நீடிக்கும் என்று வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
தாதியர் பற்றாக்குறை
தாதியர் சேவையில் 30,000இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மெதவத்த தெரிவித்துள்ளார்.
தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக மூன்று வருடங்களுக்குள் வைத்தியசாலையின் செயற்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.