அரச பயணத்துக்காக ஏன் சுகாதார அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் செலவழித்தார்! எழுப்பப்பட்டுள்ள கேள்வி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களையும் புறக்கணித்து, சென்னைக்கு சென்றிருந்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நேற்று நாடு திரும்பியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகரிக்காத இரண்டு நிறுவனங்களின் ஊடாக இந்திய கடன்திட்டங்களின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருந்துகள் இறக்குமதி
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவுச்செய்யப்பட்ட இந்திய நிறுவங்களின் ஊடாக மருந்துகளை இறக்குமதி செய்கின்றபோது அதிக காலம் செல்லும் என்ற அடிப்படையில், கேள்விக் கோரப்படாத இரண்டு யோசனைகளை அமைச்சர் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். எனினும் அவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை.
தொடர்ந்தும் உரிய நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு நிதியமைச்சரான, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களை புறக்கணித்து அவர் இந்த கோரிக்கைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.
இந்தநிலையில் திடீரென அவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சென்னையின் கௌசிக் தெரபியூட்டிக்ஸ் நிறுவன அழைப்பின் பேரில், அதன் தொழிற்சாலையை ஆய்வு செய்ய பயணமானார்.
தனிப்பட்ட செலவு
அத்துடன் தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைமை அதிகாரி பயணம் செய்வதற்கும் அவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் இந்த பயணம் வெளியில் தெரியவந்தபோது, தமது இந்த முயற்சிக்கு அரச நிதியை பயன்படுத்தவில்லை என்றும் தனிப்பட்ட செலவிலேயே சென்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், நாட்டுக்காக மருந்துகளை இறக்குமதி செய்ய செல்லும்போது, ஏன் அரச நிதியை தவிர்த்து தனிப்பட்ட செலவில் செல்லவேண்டும் என்பதை அவர் விளக்கவில்லை என்று தேசிய செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இந்த பயணத்தின் வெற்றி குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



