சுகாதார வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் பொதுவானதே! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் போது சுகாதாரப் பிரிவு வழங்கிய அறிவுறுத்தல்கள் மீறப்பட்டுள்ளதா என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆராய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்து தொற்றுநோயியல் பிரிவு மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த கருத்து வெளியிடுகையில்,
“சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு தொற்றுநோயியல் பிரிவு உள்ளது. அத்துடன், தேவையான உத்தியோகபூர்வ உத்தரவுகளை வெளியிடுவது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பொறுப்பாகும்.
எந்தவொரு பயணியும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை செய்வது அவர்களின் பொறுப்பு.
இந்த விடயங்களை கண்காணிப்பது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். இந்த விடயங்கள் நடக்கவில்லை என்றால், கொரோனா தொற்று நோய் மேலும் பரவக்கூடும்.
சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டாலும், அவர்கள் இந்த நாட்டில் தற்போதுள்ள சுகாதார ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
இது பொது மக்களுக்கும் பொருந்தும். சுற்றுலா பயணிகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்த முடியாது.
அது உதயங்க வீரதுங்கவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட முறையைப் பின்பற்ற வேண்டும்.” என கூறியுள்ளார்.