சுகாதார தரப்பு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது நிலவும் பருவப்பெயர்ச்சி மழையுடனான காலநிலையினால் இந்த அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் ஏழாயிரம் எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் மற்றும் சுகாதார மேம்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எலிக்காய்ச்சல் நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 300 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் எலிக் காய்ச்சல் நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எலிக்காய்ச்சல் என்பது ஓர் பக்டிரீயாவினால் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு தொற்றும் நோயாகும்.
குறிபாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரின் உதவியை நாடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.