டோனி, விராட், ரோஹிட் உட்பட்ட ”ஐபிஎல்” வீரர்களை தக்கவைப்பதற்கு இன்று இறுதி நாள்
இந்தியாவின் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அகமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் வீரர்கள் மத்தியில் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்பாக 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள ஐ.பி.எல் நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இந்த 4 வீரர்களில் அதிகபட்சம் 3 பேர் இந்தியர்களாக இருக்கலாம். அதேபோன்று வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையும் 2-ஐ தாண்டக்கூடாது.
ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களின் ஊதியமாக முறையே 16 கோடி, 12 கோடி, 8 கோடி, மற்றும் .6 கோடி ரூபா வீதம் என்று மொத்தம் .42 கோடி ரூபாவை ஒதுக்க வேண்டும்.
எஞ்சியுள்ள 48 கோடி ரூபாவைக் கொண்டே ஏனைய வீரர்களை ஏலத்தில் வாங்க முடியும்.
இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷாப் பண்ட், பிரித்வி ஷா, அக்ஷர் பட்டேல், அன்ரிச் நோர்டியா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட, இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோர் தொடர்வது உறுதியாகி விட்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் லோகேஷ் ராகுல் தன்னை விடுவிக்கும்படி வலியுறுத்துவதால் அவர் ஏலத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன் ஆகியோரில் ஒரு சிலரை வைத்துக் கொள்ள பஞ்சாப் அணி ஆர்வம் காட்டுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், சுனில் நரின் ஆகியோர் தக்கவைக்கப்படுவார்கள்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை தக்க வைக்க முடிவு செய்துள்ளது.
அத்துடன் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை வைத்துக் கொள்ளவும் அந்த அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலி, கிளைன் மேக்ஸ்வெல் நீடிப்பது உறுதியாகியுள்ளது.
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், ரஷித்கான் ஆகியோர் மட்டும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை 8 அணிகளும் விடுவிக்கும் வீரர்களில் இருந்து புதிய அணிகளான அகமதாபாத், லக்னோ அணிகள் தலா 3 பேரை ஏலத்திற்கு முன்பாக தெரிவு செய்யவுள்ளன.