பலத்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஹட்டன் பேருந்து நிலையம் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக இன்றைய தினம்(09.11.2026) ஹட்டன் பிரதான பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஆங்காங்கே மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஹட்டன் நகரின் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், எம்.ஆர். பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை
ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு மேலே உள்ள காமினிபுர பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த இடத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்குப் பிரிவிற்குள் தண்ணீர் கசிந்து வருவதால் அங்குள்ள அதிகாரிகள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் தீபாவளி பண்டிகைக்காக தொலைதூர மாகாணங்களிலிருந்து ஹட்டன் நகருக்கு வந்த சில வணிகர்கள், தங்கள் கடைகளில் இருந்து குப்பைப் பைகளை மழைநீர் தேங்கி நிற்கும் பிரதான சாலையில் வீசியதால், சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக ஹட்டன் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


