ஹட்டனில் விரைவில் அதிநவீன சொகுசு பேருந்து சேவைகள்
667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுல சுரவீர, டிப்போவின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட ஹட்டன் டிப்போ, தற்போது நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
டிப்போ வளாகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், பேருந்துகள் பாதுகாப்பாக இயங்கக்கூடிய வகையில் பாதைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஊழியர்களுக்கான ஓய்வறைகள், தங்குமிட வசதிகள், சுகாதார தரநிலைகளுக்கு ஏற்ப கழிப்பறைகள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பொழுதுபோக்கு வசதிகளும் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், ஹட்டனிலிருந்து கொழும்பு உள்ளிட்ட தூரப்பிரதேசங்களுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர அறிவித்தார்.
இந்த புதிய சேவைகள் மூலம் மலையக மக்களின் போக்குவரத்து தேவைகள் மேலும் இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹட்டன் டிப்போவின் புனரமைப்பு பணிகள், அரசாங்கத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் டிப்போ அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.