சாரா இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளாரா? உறுதியான தகவல்கள் இல்லை - உதய கம்மன்பில
ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி இந்தியாவில் இருப்பதாக உறுதியான தகவல்கள் இருந்தால், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இணை அமைச்சரவைப் பேச்சாளரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது. இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை.
சாரா இந்தியாவில் இருக்கிறார் என்பது உறுதிசெய்யப்பட்டால், அவரை விசாரிக்க அனுமதிக்குமாறு மட்டுமல்லாமல், அவர் இலங்கையர் என்ற வகையிலும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியுள்ளதாலும் அந்த பெண்ணை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவோம்.
எனினும் அந்த பெண் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்ற நம்பிக்கை உள்ளதே தவிர அதனை உறுதிப்படுத்துவதற்கான வேறு எந்த தகவலும் இல்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.