பொருளாதாரம் தெரியாதவர்களிடம் கதை கூறுங்கள்! அநுரவை விவாதத்துக்கு அழைத்த ஹர்ஷ
பொருளாதார ரீதியில் வீழ்ந்து எழுந்த நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்றார் என்றும், வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்றோம் எனவும், பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களிடம் குறிப்பிடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், முடிந்தால் எம்முடன் விவாதத்துக்கு வாருங்கள் தரவுகளுடன் விடயங்களை வெளிப்படுத்துகிறோம் எனவும் ஆளும் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ரணில் விக்ரமசிங்க
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்ட நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். மாற்றமின்றி செயற்படுத்துகிறார்.
2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்படும் போது பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவும், திறைசேரியின் கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாகவும் காணப்பட்டது. அத்துடன் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆகவே வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்றோம் என்று பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களிடம் குறிப்பிடுங்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். கடன் பெறும் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே கடன் பெற்று வீதிகளை அபிவிருத்தி செய்ய முடியாது.
கொள்கை ரீதியிலான கடன்
வெளிநாட்டு கொள்கை ரீதியிலான கடன் பெற வேண்டுமாயின் ஆசிய அபிவிருத்தி மற்றும் ஜெய்கா நிறுவனங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை பெற பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
வாய்க்கு வந்த அனைத்தையும் பேச முடியும். ஆனால் அதனை செயலில் காட்டுவது கடினம். பொருளாதாரம் தொடர்பில் பெலவத்தையின் நிலைப்பாடு என்னவென்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது. எமது கொள்கையை கேள்வியெழுப்ப முன்னர் தமது பொருளாதார கொள்கையை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்.
கொடஹேவா வந்தார். சென்று விட்டார். அவர் எம்முடன் இல்லை. கொடஹேவா வரலாமலிருந்திருந்தால் எமது பொருளாதார திட்டத்தை சமூகமயப்படுத்தியிருக்கலாம். பெலவத்தையின் சூழ்ச்சியிலா கொடஹேவா எம் தரப்புக்கு வந்தார் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
அநுரகுமார திசாநாயக்க சபையில் சண்டித்தனமான முறையில் உரையாற்றினார். எம்மை கேலிக்குள்ளாக்கினார். ஜனாதிபதி எமது பழைய நண்பர் என்பதால் நாங்கள் அவரை நகைப்புக்குள்ளாக்கவில்லை.
ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்தை நாங்கள் அவருக்கு வழங்குவோம். கடன் பெற்றாவது வீதிகளை அபிவிருத்தி செய்வதாகவும், அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
கடன் பெறுவதற்கு முன்னர் அடிப்படை கொள்கை என்னவென்பதை வெளிப்படுத்துங்கள்” என்றார்.]



