அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மீதான நம்பிக்கயில் வீழ்ச்சி
அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவது, நாணய மதிப்பின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாயின் அண்மைக்கால வீழ்ச்சி குறித்து கவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க டொலரின் மதிப்பு சுமார் 342 ரூபாயாக உயர்ந்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வமற்ற சந்தையில் இதன் விகிதம் 345 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகக் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாணய சந்தைகள் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாயின் மதிப்பை முகாமைத்துவம் செய்வதற்கான அரசாங்கத்தின் திறன் மீதான நம்பிக்கை படிப்படியாக பலவீனமடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.
வட்டி விகிதங்களை அதிகரிப்பது உள்ளிட்ட அண்மைக்கால நடவடிக்கைகள், ரூபாய் மீண்டும் சரிவைச் சந்திப்பதற்கு முன்னர் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்கியிருந்ததாக டி சில்வா சுட்டிக்காட்டினார்.
புதிய கட்டுப்பாடுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் சான்றுகளை இறக்குமதியாளர்கள் செலுத்தத் தொடங்கியுள்ளதால், வெளிநாட்டு நாணயத்திற்கான தேவை அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் சில இலங்கையர்கள் ரூபாய் மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் பணம் அனுப்புவதைத் தாமதப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, சில ஏற்றுமதியாளர்களும் அதே காரணத்திற்காகத் தங்களின் ஏற்றுமதி வருவாயைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.