வெசாக் மூலமான நல்லிணக்கம் : சிறுபான்மையின சமூகத்தின் பெருந்தன்மை
வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் உட்பட பல இடங்களில் தன்சல் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. அரசாங்க திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட பொலிஸார், இரானுவத்தினர் என பலர் இதனை செய்து வந்துள்ளனர்.
இதில் பல சமூகங்களை சேர்ந்தவர்களும் தன்சலை பெற்றுள்ளதோடு இதன் மூலம் சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
இந்த வெசாக் தினத்தை பௌத்த மக்கள் மே மாதம் 23ஆம் திகதி அனுஷ்டித்துள்ளதுடன் பௌர்ணமி தினமானது புத்தரின் பிறப்பு ,ஞானமடைதல், இறப்பு ஆகியவற்றை குறிக்கும் ஒரு தினமாக காணப்படுகிறது.
பூரண ஒத்துழைப்புக்கள்
இது இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா, சீனா, மியன்மார், கம்போடியா, சிங்கப்பூர், தாய்வான், தென்கொரியா,நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் இதனை கொண்டாடுகின்றனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் சிறுபான்மை சமூகமும் பெரும்பான்மை மக்களுக்காக பூரண ஒத்துழைப்புக்களுடன் வெசாக் தினத்துக்காக ஒத்துழைத்துள்ளனர்.
சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் பெரும்பான்மை சமூகம் தன்சலை வீதியோரங்களில் வழங்கி வந்துள்ளனர். இது போன்ற சில நிகழ்வுகள் சிறுபான்மை மக்களுக்காக நடாத்தப்படுகின்ற போது பல்வேறு இன்னல்களை தமிழ் பேசும் மக்கள் அனுபவித்துள்ளார்கள் அனுபவித்தும் வருகிறார்கள்.
நாட்டின் சட்ட திட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலையில் இருந்தால் அவர்கள் உரிமைகளோடும் சுதந்திரத்தோடும் வாழ அரசாங்கம் அம்மக்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் அப்போழுதுதான் இன நல்லிணக்கம், சமூக ஒற்றுமை என்பன ஏற்படும்.
இந்த வருடத்துக்கான வெசாக் உற்சவ கருப்பொருளாக "மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பாராமல் நாம் என்ன செய்தோம்" என்பதாக காணப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்த நிலையில் காணப்பட்டாலும் கடந்த கால நெருக்கடியை விடவும் இம்முறை வெசாக் தினம் களை கட்டியுள்ளது.
தன்சல் நிகழ்வுகள்
மக்கள் ஆர்வத்துடன் பெரும்பான்மை சமூகத்தின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அன்னதானங்களை பெற்றுள்ளனர். வீதியோரங்கள் அனைத்தும் வெசாக் தோரணைகள் மூலமாக அலங்கரிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் மூலமாக அவர்களும் இணைந்து தன்சலை உற்சாகமாக பெறுகின்றனர்.
அவர்களுடைய மதக் கலாசாரத்தை மதித்து நடக்கின்றனர். இதன் மூலம் தமிழ், முஸ்லிம். சிங்களம் என்ற பிரிவினையற்ற இன ஐக்கியம் ஏற்படுகின்றது இது தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புகின்றனர்.
பாதுகாப்புக்கு மத்தியில் விகாரைகளில் தன்சல் நிகழ்வுகள் மத போதனைகளை நடாத்துகின்றனர் இது போன்ற சுதந்திரமாக சிறுபான்மை மக்களும் அவர்களுடைய சடங்குகளை நடாத்த சந்தர்ப்பமும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
நீதி நியாயங்கள்
நீதிமன்ற தடை என்ற பேரில் தடை உத்தரவு வழங்கப்பட்டு பொலிஸாரால் இடை நிறுத்துவதும் உள வளத்தை பாதிக்க கூடிய வகையில் இன்றி நிம்மதியாக வாழ வழியமைக்க வேண்டும் அப்போழுது தான் நாட்டில் முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் மக்கள் மனங்களில் நிலைத்திருக்க கூடிய ஒற்றுமை ஏற்படும்.
வெசாக் தினத்தில் மாத்திரம் ஒற்றுமையை எதிர்பார்த்து விடாது தொடர்ந்தும் புத்தர் கூறும் நல்ல பல வார்த்தைகள் ஊடாக மக்களை ஒற்றுமையாக வாழக்கூடிய விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு மக்கள் பல உறவுகளை இழந்து கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கான நீதி நியாயங்கள் கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான சர்வதேச விசாரனை பொறி முறை ஒன்று தேவை இப்படியான அப்பாவி மக்களுக்கான நீதியை இந்த நேரத்தில் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே வடக்கு கிழக்கு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |