கிளிநொச்சியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் கிராமத்திற்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் பொது மக்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊரியான், கல்மடு, நகர்தருமபுரம் கிழக்கு, புன்னை நீராவி ஆகிய கிராமங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் கிராமத்திற்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் பொதுமக்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய வீடுகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.
இந்த வைபவத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் மாவட்ட வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் சுபாஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மங்கல விளக்கேற்றி உத்தியோகப்பூர்வமாக வீட்டைத் திறந்துவைத்த ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன், “சிறுகக் கட்டி பெருக வாழ்“என்கின்ற சான்றோர் வாக்குப்படி இந்த வீட்டை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அழகுற அமைத்துள்ள பயனாளிகளைப் பாராட்டியதுடன், இதேபோன்று அரசாங்கம் வழங்கும் வீட்டுத் திட்டத்துக்குரிய நிதியைப் பெற்று தங்களுடைய வீடுகளை ஏனையோரும் கட்டிமுடித்துப் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வீட்டுத்திட்டத்துக்கு வழங்கப்படுகின்ற 6 இலட்சம் ரூபா போதாது என்று நினைத்துக் கிடைப்பதையும் இழக்காமல், கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு தமக்கான வீடுகளைப் பொதுமக்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



