வவுனியா மாவட்டத்தில் 98 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டன
வவுனியா மாவட்டத்தில் சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 108 பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் 98 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள், சிங்கள மொழி பாடசாலைகள் உள்ளடங்களாக 108 பாடசாலைகள் இன்று (21.10) திறப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் மீள திறக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வலயக் கல்வி திணைக்களம் ஊடாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வவுனியா தெற்கு வலயத்தில் 44 பாடசாலைகளில் 35 பாடசாலைகளும், வவுனியா வடக்கு வலயத்தில் 64 பாடசாலைகளில் 63 பாடசாலைகளும் மீள திறக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 91 வீதமான பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக எமது மாவட்டத்தின் கல்வி
நிலையையும், மாணவர்களினது நிலமையையும் கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கி
பாடசாலைகளை மீள திறந்து கற்றல் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய அதிபர்,
ஆசிரியர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில்
நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் பாடசாலைகளின் அனைத்து சாவிகளையும் வலயக் கல்விப் பணிமனையில் ஒப்படைக்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அறிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 85 பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் மாணவர்கள் பாடசாலைகளுக்குள் செல்ல முடியாது திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளை புறக்கணிக்கும் அதிபர்கள் உங்கள் வசமுள்ள பாடசாலைகளின் சாவிகளை வலயக் கல்விப் பணிமனையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசியிருக்கின்றேன்.
ஏற்கனவே எமது மாவட்டத்தின் கல்வி பாரிய வீழ்ச்சியை கண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் புறக்கணிப்பு மிகவும் வேதனையாக இருக்கின்றது.
எனவே, உங்களிடம் உள்ள பாடசாலையின் அனைத்து சாவிகளையும் கல்விப் பணிமனையில் உடனடியாக ஒப்படைக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
