ராஜபக்சர்களின் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி!
தெற்காசியாவின் விமான மற்றும் கடற்படை விவகாரங்களின் மையமாக அம்பாந்தோட்டையை மகுடம் சூடுவதற்கான முயற்சிகளுக்கு புத்துயிர் அளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாரையில் வைத்து நேற்று (18.08.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடற்படை மையம்
“அம்பாந்தோட்டையை விமான மற்றும் கடற்படை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம்.
செப்டம்பர் 22ஆம் திகதிக்குப் பிறகு, அம்பாந்தோட்டை தெற்காசியாவின் விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படை விவகாரங்களின் மையமாக மீண்டும் ஒரு முறை மாற்றுவோம்.
இது ஒரு மில்லியன் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
அரசியல்வாதிகளின் தீர்மானம்
அரசியல்வாதிகளின் தீர்மானத்தை விட பொதுமக்களின் அரசியல் தீர்மானங்களே முக்கியம். எனது தொடர்புகள் மக்களுடன் மட்டுமே.
பதவிகள் மற்றும் சலுகைகளுக்காக உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டாலும், அடிமட்டத்தில் உள்ள விசுவாசிகள் கட்சியுடன் இருக்கின்றனர்” என்றார்.
நல்லாட்சி அரசாங்கம் என்பது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட ஆட்சி மாற்றமாகும்.
அந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் செயற்பட்டு வந்தனர்.
இந்த காலப்பகுதியில், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் ஆட்சி அமைத்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான திட்டமிடல்கள், செயற்பாடுகள் அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தில் தடைப்பட்டன.
குடும்ப ஆட்சி என எதிர்கட்சிகளால் முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தால் மாற்றம் பெற்றது.
இதில் முக்கியமாக அம்பாந்தோட்டையை பொருளாதார ரீதியில் முன்னிலைப்படுத்தல் பற்றிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் அவை அனைத்தும் தடைபட்ட நிலையில், தற்போதைய பிரசார கூட்டத்தில் மீண்டும் அத்திட்டதிடல்கள் மற்றும் அபிவிருத்திகளை ஆட்சிபீடம் ஏறினால் செயற்படுத்துவேன் என நாமல் சூளுரைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |