காசா பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் கெய்ரோ பயணம்
அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜாரெட் குஷ்னரின் மத்திய கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக, எகிப்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் கலீல் அல்-ஹய்யா கெய்ரோ சென்றுள்ளார்.
கடந்த ஜூலை மாத பிற்பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர், கலீல் அல்-ஹய்யா எகிப்திற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
15 அம்ச அமைதித் திட்டம்
இதன்போது அவர் எகிப்திய உளவுத்துறைத் தலைவர் ஹசன் ரஷாத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ள நிலையிலேயே இந்த இராஜதந்திர நகர்வுகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை, காசாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பு பூரணமாக ஆயுதங்களைக் களையும் வரை காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலகாது என நெதன்யாஹு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.