தியாக மரணத்தை பெருமையுடன் அறிவிக்கிறோம்..! முக்கிய அதிகாரிகளின் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்
பாலஸ்தீன ஆயுத இயக்கமான ஹமாஸ், அதன் ஆயுதப்பிரிவான அல்-கஸ்ஸாம் படையின் பேச்சாளராக அறியப்பட்ட அபு ஒபைதா மற்றும் காசாவில் ஹமாஸின் முன்னாள் தலைவர் முகம்மது சின்வார் ஆகியோர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேல் நடத்திய போரில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
இன்றையதினம்(29.12.2025) ஹமாஸ் ஆயுதப் பிரிவு காணொளி வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஹமாஸின் இராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் படை, நீண்ட காலமாக பேச்சாளராக இருந்த அபு ஒபைதாவின் மரணத்தை உறுதிப்படுத்தியதுடன், புதிய பேச்சாளரை நியமித்துள்ளதாக அறிவித்தது.
உயிரிழப்பு
இரண்டு ஆண்டுகளாக காசாவில் நீடித்து வந்த கடுமையான போரின் போது, ஹமாஸ் அமைப்பின் ஊடகத் தந்திரத்தின் முகமாக விளங்கிய அந்த முக்கிய நபரின் மரணம் குறித்து வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவாகும்.
புதிய பேச்சாளர் முதன்முறையாக அபு ஒபைதாவின் உண்மையான அடையாளத்தையும் வெளிப்படுத்தினார். அவரது உண்மையான பெயர் ஹுதைஃபா சமீர் அப்துல்லா அல்-கஹ்லூத் என அவர் தெரிவித்தார்.

“மகத்தான தலைவர் அபு ஒபைதாவின் தியாக மரணத்தை நாம் பெருமையுடன் அறிவிக்கிறோம். அவரது பொறுப்பையும் பெயரையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்,” என அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த மே மாதத்தில் இஸ்ரேல் இராணுவம், ஹமாஸின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வாரின் இளைய சகோதரரான முகம்மது சின்வார் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது.
புதிய இராணுவ தாக்குதல்
அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, அபு ஒபைதாவும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேல்- காசா நகரில் புதிய இராணுவ தாக்குதலின் ஆரம்ப கட்டத்தை தொடங்கியபோது, அந்த பகுதியை போர்ப்பகுதியாக அறிவித்து நூற்றுக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்களை அழித்த நிலையில், பாலஸ்தீன மக்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கிய நேரத்தில், கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் அவர் தனது கடைசி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
மேலும், ரஃபா பிரிகேட்டின் தலைவரான முகம்மது ஷபானா, அதேபோல் மூத்த தலைவர்களான ஹக்கம் அல்-இஸ்ஸா மற்றும் ராயித் சஆத் ஆகியோரும் உயிரிழந்ததாக அல்-கஸ்ஸாம் படை உறுதிப்படுத்தியுள்ளது.