ஊடகவியலாளர்கள் மீதான கொடூரங்கள்: விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க ஹக்கீம் எம்.பி வலியுறுத்தல்!
யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும், "பாரதி ஒரு மனிதாபிமான ஊடகன்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று(01.03.2026) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் எம்.பி. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் இழைக்கப்பட்ட கொடுமைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் ஊடகவியலாளர்கள் சொல்ல முடியாத அளவிலான கொடூரங்கள், துன்பங்கள் மற்றும் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். அதில் பலர் கொல்லப்பட்டதோடு, காணாமலாக்கப்பட்டும் நீதி இன்றியே மறைந்துபோயுள்ளன.

தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது, சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் எதிராகவும் கொடூரங்கள் இழைக்கப்பட்டன. படுகொலைகள் நடைபெற்றபோதிலும், அவை தொடர்பாக உரிய நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
சுயாதீனமானதும் நேர்மையானதும் ஆன புலனாய்வுகள் முன்னெடுக்கப்படாததுடன், குற்றம் இழைத்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் இல்லை. எனவே, இவ்வாறான அனைத்து சம்பவங்களையும் விசாரிக்க தனியான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.
மறைக்கப்பட்ட உண்மைகள்
அத்தகைய ஆணைக்குழு நியமிக்கப்படுமானால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது. படைத் தரப்பிலும் புலனாய்வு பிரிவுகளிலும் இருந்த சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது மெல்ல மெல்ல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவது அவசியமாகும்.
அதன் மூலம் பல உண்மைகள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால், சிறுபான்மையினரின் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.
