எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன! பிள்ளையான் பகிரங்கம்
பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன என கிழக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு (27) கிரான் ரெஜி மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வட பகுதி தலைவர்கள் கைவிட்டால் எங்களால் வாழ முடியாது என்று எண்ணிக்கொண்டு அவர்களை எஜமான்களாக நம்பிக் கொண்டிருக்கின்ற சில தலைவர்கள் கொதிநிலை அடைந்திருக்கின்றார்கள்.
துப்பாக்கிகள் திணிப்பு
அவர்கள் வரலாற்றை புரட்டிப் போடப் பார்க்கின்றார்கள். மக்கள் சிந்திக்க வேண்டும் அவர்கள் எண்ணுவதென்னவென்றால் இளைஞர்கள் மத்தியிலே நஞ்சூட்ட வேண்டுகின்றார்கள்.
கவலை என்னவெனில் அந்த எம்.பி ஒரு வரலாற்று ஆசிரியர் நானோ கருணா அம்மானோ, அல்லது ஜூலை கலவரமோ எல்லாவற்றிக்கும் அடித்தளமிட்டவர்கள் யார். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டை தீர்மானத்தை எடுத்த பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தேடி கற்றுக் கொள்ளுங்கள்.
விடப்பட்ட சொல்லாடல்களும், கருத்தாடல்களும் தான் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை தலைவரை ஆக்கியது.
அவர்கள் பற்ற வைத்த நெருப்பு பெரும் தீப்பொறியாக பல இயக்க தலைவர்களை உருவாக்கி திட்டங்களையும் துவக்குகளையும் ஏந்துகின்ற நிலைக்கு எங்களுடைய காலடிக்கு கொண்டு வந்து தந்தது.
பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன.
உணர்வு பூர்வமான செயற்பாடுகள்
இவற்றையெல்லாம் கூறாமல் இடைநடுவிலே அழகான படத்தைப் பார்த்து விட்டு வில்லன்களுடைய கதைகளை மாத்திரம் எங்களுடைய தலைகளிலேயே சொருகப் பார்க்கின்றார்கள்.
அதிலும் படித்தவர்கள் ஆசான்கள் என்று சொல்லுகின்ற இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் என்ன செய்தார்கள் இந்த மண்ணுக்கு. நாங்கள் சொல்ல முடியும் இந்த மண்ணிலே ஆயிரக்கணக்கான பிள்ளைகளுடைய உயிரிழப்புகளை தடுத்தோம்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிலேயே அனைவரும் வந்து ஒன்று சேருங்கள். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு ஒன்று சேர்வதற்காக வேண்டி அறைகூவல் விடுக்கின்றோம்.
நாங்கள் ஒரு தெளிவான நோக்கத்தோடு நல்ல நோக்கத்தோடு கடந்த காலங்களைப் போல் அழிவு நிலையில் இந்த மக்களை மண்ணையும் விட்டுவிட்டு செல்ல முடியாது.
ஆகையால் பல விட்டுக்கொடுப்புகளோடு, அர்ப்பணிப்போடு, பல கசப்பான பாதைகளை கடந்து வந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே இப்பொழுது எழுந்து நிற்கின்ற இந்த சவாலை, கிழக்கு மாகாண சவாலை, எங்களுக்கு எதிராக நிற்கின்ற தலைவர்களின் சவாலை, எதிர்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தை நிற்கின்றோம்.
இதனை நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இது காலத்தின் கடமை இதன் அடிப்படையில் உணர்வு பூர்வமாக இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். உணர்வு பூர்வமான செயற்பாடுகள் தான் வெற்றியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |