என்கவுண்டர் மரணங்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சுற்றறிக்கை!
பொலிஸ் காவலில் இருக்கும் போது சந்தேக நபர்களின் 'என்கவுண்டர் என்ற எதிர்பாரா மரணங்கள்' ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, காவலில் உள்ள சந்தேக நபர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் எந்தவொரு நிகழ்வையும் காணொளிப் பதிவு செய்ய ஒரு பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான காணொளிப் பதிவுகள் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் சாட்சியமாகப் பயன்படுத்தப்படும். அத்துடன், பொலிஸ் விசாரணைகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவும் என்று பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக கவனத்திற்கு வலியுறுத்தல்
ஒரு சந்தேக நபர் குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தைச் செய்தாரா என்பதை நிரூபிக்கும் வகையில் விசாரணையை வெற்றிகரமாக நடத்துவதே பொலிஸாரின் கடமையாகும். இந்தநிலையில், நிபுணத்துவ சான்றுகளைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டால், சந்தேகத்திற்குரிய எந்தவொரு நபரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
சந்தேகத்திற்குரிய நபரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றாலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவருடன் போதுமான எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும்.
காவலில் இருக்கும் போது சந்தேக நபர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சந்திக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு இடையூறு
சந்தேக நபர் ஒரு சட்டத்தரணியைச் சந்திக்க விரும்பினால், விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொலிஸ் அதனை அனுமதிக்க வேண்டும். பாதாள உலகக் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்படும்போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு அதிகாரி சந்தேக நபரைச் சரிபார்த்து, நிலைய பதிவு புத்தகத்தில் ஒரு குறிப்பைச் செய்ய வேண்டும். அத்தகைய சந்தேக நபர் காவல் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும் போதெல்லாம், பொறுப்பு அதிகாரி, மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளருக்குத் தெரிவிக்கப்படல் வேண்டும்.
சந்தேக நபர் தப்பிச் செல்வதைத் தடுக்க பொலிஸார் இன்னும் அதிகபட்ச முயற்சிகளை எடுக்க முடியும். சந்தேக நபர் ஒரு பாதுகாப்பான இடத்திலோ அல்லது வாகனத்திலோ வைக்கப்பட வேண்டும், இதனால் அவர் பொலிஸ் அதிகாரியின் ஆயுதத்தைக் கைப்பற்ற வாய்ப்பில்லை என்பது வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்கவுண்டர் என்ற எதிர்பாராத மரணங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பொலிஸ்
மா அதிபர் தயாரிக்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்குப் பதிலளிக்கும்
வகையில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
