எதிர்மறையான பாதையால் இலங்கை பெரும் விலையை கொடுக்க நேரும்: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை
இலங்கை, தனது எதிர்மறையான பாதையை தொடர்ந்தால், நாடு பெரும் விலையை கொடுக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உலக தமிழ் பேரவை எச்சாித்துள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பான தனது ஈடுபாடு அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் அல்லது அதன் பன்முகத்தன்மை போன்ற விடயங்களில், எதிர்மறையான பாதையைத் தொடர்ந்தால், நாடு பெரும் விளைவை கொடுக்க நேரிடும் என்று பேரவையின் பேச்சாளா் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக, சர்வதேச சமூகத்தின் தலைவர்கள், சர்வதேச சட்டத்தை மீறும் இலங்கை தலைவர்களுடன் நேரடி ஈடுபாட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுரேன் கோாியுள்ளாா்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி, கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் நிறுவப்பட்டமை மிகவும் கவலையளிக்கும் நிகழ்வாகும். செயலணியில் சில முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம், இலங்கையின் பாரம்பரிய ஜனநாயக பொறிமுறைகளை புறக்கணித்து, ஜனாதிபதி செயலணிகள் மூலம் இலங்கையை ஆட்சி செய்கிறது.
ஆட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் வியக்கத்தக்க வகையில் தோல்வியடைந்துள்ள தற்போதைய அரசாங்கம், தீவிரவாதத்தையும், இன வெறுப்புகளை வளர்க்கும் என்று அஞ்சுவதாக உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நல்லிணக்கத்திற்கான சாவுமணியாக இருக்கும். அத்துடன் எதிர்காலத்தில் மோதல்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே சர்வதேச சமூகம் இந்த உண்மையை உணர்ந்து, இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான பயனுள்ள முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு உலகத் தமிழ் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.