ஜி.எஸ்.பி. பிளஸ் விவகாரம் : பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை - முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து
இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன் நடத்துவதில் பயனில்லை என்றும், அது குறித்து பிரஸ்ஸல்ஸ் நகருடனேயே பேச வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"ஜி.எஸ்.பி. பிரச்சினை குறித்து பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை. இது குறித்து பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலேயே பேச வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துடனும் பேச்சு நடத்தப்பட வேண்டும்.
மீண்டும் விண்ணப்பிக்கவுள்ள இலங்கை
ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும் முறைமையின்படியே இங்கிலாந்தும் ஜி.எஸ்.பி. சலுகையை வழங்குகின்றது. எனவே, பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்லாமல் பிரான்ஸுக்குச் செல்வதால் எவ்விதப் பலனும் கிடைக்காது. இது முற்றிலும் பிரஸ்ஸல்ஸ் சார்ந்த ஒரு விடயமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளை இலங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது.
முன்னதாக, 2010 ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் நிறுத்தப்பட்ட இந்தச் சலுகை, பின்னர் 2017 இல் மீண்டும் வழங்கப்பட்டது.
இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கின்றது. 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இருதரப்புக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 3.9 பில்லியன் யூரோக்களாகும்.
இதில் இலங்கையின் ஏற்றுமதியில் பாதிக்கும் மேற்பட்டவை ஆடைத் துறையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுக்கு அமைய, இலங்கை இந்தச் சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தயாராகி வரும் பின்னணியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan