பௌத்த மாநாட்டுக்காக ஆபிரிக்கா சென்று வந்த குழுவை சேர்ந்த இருவருக்கு கோவிட் தொற்று உறுதி
தன்சானியாவில் அண்மையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில், நாடு திரும்பிய தூதுக்குழுவினர் துரிதமாக கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பௌத்த பிக்குவிற்கும் இன்னுமொரு நபருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான தன்சானியாவில் அண்மையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த பிக்குகள் உட்பட 30 பேர் கலந்துகொண்டனர்.
மாநாடு முடிந்து திரும்பிய இவர்களுக்கு தனிசானியாவில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கோவிட் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
நாடு திரும்பிய இவர்கள், தமது இருப்பிடங்களை நோக்கி புறப்பட்டுள்ளனர். இவர்களில் மாநாட்டில் கலந்துகொண்ட கண்டியை சேர்ந்த பிக்குவுக்கும் மற்றுமொரு நபருக்கும் ரெபீட் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது இவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பாலித சுபசிங்க, கோவிட் வைரஸின் ஆபிரிக்க திரிபு இலங்கைக்குள் பரவினால் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படும்.
இதனால், மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், தற்போது தங்கி இருக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும். அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு இது பற்றி தெரியப்படுத்துங்கள். தேவை என்றால் மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.



