மலையாளபுரத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள இளைஞர் குழு
கிளிநொச்சி - மலையாளபுரத்தில் வீடொன்றினுள் புகுந்து இளைஞர் குழுவொன்று நேற்று தாக்குதல் நடத்தி விட்டு பல இலட்சம் பெறுமதியான வீட்டு உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மலையாளபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரின் வீட்டுக்குள் நுழைவாயில் கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தளபாடங்கள், வீட்டின் ஜன்னல்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடித்து நொருக்கியுள்ளனர்.
அத்தோடு இக்கும்பல் வீட்டிற்குள் நுழைவதினை அவதானித்த வீட்டின் உரிமையாளரான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் பின் வழியால் தப்பிச்சென்று விட்ட நிலையில், அவரது மகன் மீது தந்தையைக் கேட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான 80 அடி தகரப்பந்தல் ஒன்று கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பொருளாளரின் பொறுப்பிலிருந்துள்ளது. அண்மையில் கிராமத்தில் நடந்த இரண்டு மரண வீடுகளுக்கும் அவர் அதனை 40 அடியாகப் பிரித்து வழங்கியுள்ளார்.
ஆனால் தங்களுக்கு 80 அடி பந்தலையும் வழங்கவில்லை என தெரிவித்து ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த குழு கிராமத்தில் உள்ள பிறிதொரு வீட்டிற்குள் நுழைந்து இவ்வாறு தாக்குதல் நடத்திய போதும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கிராமத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
